இரண்டு புதுப்பிக்கப்பட்ட கொவிட்-19 தடுப்பூசிகள் அக்டோபர் 28 முதல் கிட்டத்தட்ட 500 தனியார் மருந்தகங்களிலும் 10 பலதுறை மருந்தகங்களிலும் கிடைக்கும். மேலும் எஞ்சியுள்ள ஐந்து கூட்டுப் பரிசோதனை, தடுப்பூசி மையங்கள் (JTVCs) டிசம்பர் 1 முதல் மூடப்படும்.
“புதுப்பிக்கப்பட்ட தடுப்பூசிகள் தற்போதைய மற்றும் புதிதாகத் தோன்றும் திரிபுகளுக்கு எதிராக வலுவான நோயெதிர்ப்பு சக்தியை வழங்குகின்றன. மேலும் முந்தைய தடுப்பூசிகளுடன் ஒப்பிடுகையில், கொவிட்-19 க்கு எதிராக சிறந்த பாதுகாப்பை வழங்குகின்றன”, என்று சுகாதார அமைச்சு அக்டோபர் 25ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.
தடுப்பூசிகளின் பாதுகாப்பு விவரங்கள் முந்தைய பதிப்புகளுடன் ஒப்பிடத்தக்கவை என்றும் அது மேலும் கூறியது.
குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு தேசிய அளவில் பரிந்துரைக்கப்பட்ட, நோய்த்தடுப்பு மருந்துகளைப் பரிந்துரைக்கும் நோய்த்தடுப்பு நிபுணர் குழுவின் (இசிஐ) பரிந்துரையின் அடிப்படையில் தடுப்பூசிகள் வெளியிடப்பட்டன.
“தடுப்பூசி, குறிப்பாக கடுமையான கொவிட் -19 அபாயத்தில் உள்ள நபர்களுக்கு உதவும்,” என்று அமைச்சு கூறியது.
60 வயது அல்லது அதற்கு மேற்பட்டவர்கள், ஆறு மாதங்கள் அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடைய மருத்துவ ரீதியாக பாதிக்கப்படக்கூடிய நபர்கள், முதியோர் பராமரிப்பு இல்லங்களில் வசிப்பவர்கள் ஆகியோர் கடுமையான கொவிட்-19 பாதிப்பு ஏற்படுவதற்கான அதிக ஆபத்தில் உள்ளவர்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளனர்.
அவர்கள், தடுப்பூசி போடப்படாவிட்டால், முதலாவது தடுப்பூசி, மற்றும் கூடுதல் தடுப்பூசிகள் இரண்டையும் போட்டுக்கொள்ள வேண்டும். ஏனெனில், அவர்கள் தடுப்பூசியின் மேம்பட்ட பாதுகாப்பின்மூலம் மிகவும் பயனடைவார்கள் என்று அமைச்சு தெரிவித்தது.
சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் மருத்துவ ரீதியாகப் பாதிக்கப்படக்கூடிய மக்களுடன் வசிப்பவர்கள் அல்லது பணிபுரிபவர்கள் தடுப்பூசியைப் பெறுவதைக் கருத்தில் கொள்ள வேண்டும்.
தொடர்புடைய செய்திகள்
தடுப்பூசி போடாதவர்கள், ஆறு மாதங்கள் முதல் நான்கு வயது வரை உள்ளவர்களாக இருந்தால், எட்டு வார இடைவெளியில் இரண்டு தடுப்பூசிகளைப் போட்டுக்கொள்ள வேண்டும்.
ஐந்து வயது அல்லது அதற்கு மேற்பட்ட தடுப்பூசி போடப்படாதவர்கள், ஒரு தடுப்பூசி பெற வேண்டும். முன்பு அது இரண்டு தடுப்பூசிகளாக இருந்தது. ஏனெனில் இங்குள்ள பெரும்பாலான மக்கள் கடந்தகால தொற்றுநோயிலிருந்து ஓரளவு பாதுகாப்பைப் பெற்றிருப்பார்கள் என்று அமைச்சு தெரிவித்தது.
ஆறு மாதங்கள் அல்லது அதற்கு மேற்பட்ட வயதிற்குட்பட்ட தடுப்பூசி போடப்பட்டவர்கள், அவர்களின் கடைசி தடுப்பூசியிலிருந்து ஓர் ஆண்டுக்கு கூடுதல் தடுப்பூசி பெற வேண்டும்.
தேசிய தடுப்பூசித் திட்டத்தின் கீழ் தகுதியுடைய அனைவருக்கும் தடுப்பூசி இலவசம்.
கூட்டுப் பரிசோதனை, தடுப்பூசி மையங்கள் மூடல்
நூற்றுக்கணக்கான மருந்தகங்கள் இப்போது கொவிட்-19 தடுப்பூசிகளை வழங்குவதால், பலதுறை மருந்தகங்களுடன், புக்கிட் மேரா, ஜூரோங் ஈஸ்ட், காக்கி புக்கிட், செங்காங், உட்லண்ட்ஸ் ஆகிய இடங்களில் உள்ள ஐந்து கூட்டுப் பரிசோதனை, தடுப்பூசி மையங்கள் டிசம்பர் 1 முதல் செயல்படுவதை நிறுத்தும் என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இன்னும் இந்த இடங்களில் தங்களுடைய தடுப்பூசிகளைப் பெற விரும்புபவர்கள் நவம்பர் 30ஆம் தேதிக்குள் அங்கு நேரடியாகச் செல்லலாம் அல்லது https://vaccine.gov.sg/covid இணையத் தளத்துக்குச் சென்று தடுப்பூசி போடுவதற்காக காலத்தை முன்பதிவு செய்யலாம்.
https://gowhere.gov.sg/vaccine என்ற இணையத் தளத்தில் அட்டவணையுடன், நடமாடும் தடுப்பூசிக் குழுக்கள் இன்னும் தீவு முழுவதும் செயல்படுத்தப்படும்.
ஒரு மருந்தகத்தில் கொவிட்-19 தடுப்பூசிக்கான காலத்தை முன்பதிவு செய்ய, https://vaccine.gov.sg/covid இணையத் தளத்தை நாடலாம் அல்லது பலதுறை மருந்தகங்களில் தடுப்பூசி போட HealthHub செயலியில் முன்பதிவு செய்யலாம்.