மூன்றாண்டு காலமாக நடைபெற்று வந்த மேம்பாட்டுப் பணிகள் நிறைவுபெற்றதைத் தொடர்ந்து சிஸ்டர்ஸ்’ ஐலண்ட்ஸ் மரின் பூங்கா திங்கட்கிழமை திறக்கப்பட்டு உள்ளது.
பொதுமக்கள் அங்கு சென்று சிங்கப்பூரின் தென்தீவுகளின் அழகைக் கண்டு ரசிக்கலாம். கடலோர வனப்பாதை, பவளப்பாறைகள் போன்றவற்றைப் பார்த்து மகிழ்வதுடன், அவர்கள் நீந்தி விளையாடவும் வசதிகள் அங்கு இருக்கும்.
பார்வையாளர்களுக்குத் திறக்கப்பட்டு இருக்கும் ஒரே கடற்பகுதி பூங்கா இது.
‘பிக் சிஸ்டர்ஸ் ஐலண்ட்’ தீவுக்குள் அமைந்துள்ள அந்தப் பூங்கா 40 ஹெக்டர் பரப்பளவில் பொலிவூட்டப்பட்டுள்ளது. ‘ஸ்மால் சிஸ்டர்ஸ் ஐலண்ட்’ தீவு ஆராய்ச்சி மற்றும் மரபுடைமைப் பாதுகாப்புக்குரிய வட்டாரம்.
கடந்த 2021ஆம் ஆண்டு ‘பிக் சிஸ்டர்ஸ் ஐலண்ட்’ மேம்பாட்டுக்காக மூடப்பட்டது.
சிங்கப்பூரின் கடல் வட்டார வாழ்க்கை முறையை அதிகமானோர் தெரிந்துகொள்ளும் வகையிலும் வருகையாளர்களுக்கு ஏற்ற இடமாக மாற்றும் வகையிலும் அந்த மேம்பாட்டுப் பணிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
பெரும்பாலும் நகர்ப்புறக் காட்சிகளைச் சுற்றிப் பார்ப்போரின் கவனத்தில் படாத இடமாக கடற்பகுதிகள் இருந்ததால் அதனை மாற்றும் வகையில் மேம்பாட்டுப் பணிகள் திட்டமிடப்பட்டன.
சிங்கப்பூர் கடலோரத்தில் இருந்து ஏறத்தாழ 30 நிமிட படகுப் பயணத்தில் அந்தப் பூங்காவை சென்றடைந்துவிடலாம்.