தோ பாயோ முதியோர்களுக்கு உற்சாகமூட்டும் நடவடிக்கைகள்

தோ பாயோ முதியோர்களுக்கு உற்சாகமூட்டும் நடவடிக்கைகள்

2 mins read
3ee4116d-a9e5-40a6-86dd-3af186f76440
மே 9ஆம் தேதி தோ பாயோ சமூக வருகையின்போது சுகாதார அமைச்சர் ஓங் யி காங்கும் பீஷான்- தோ பாயோ குழுத் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினருமான சாய் யின்சாவ்வும் குடியிருப்பாளர்களுடன் உரையாடுகின்றனர். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

தோ பாயோவில் குடியிருக்கும் மூத்த குடிமக்களை உற்சாகப்படுத்தும் முயற்சி தொடங்கப்பட்டுள்ளது.

அதன்படி பலவீனமான, தனித்து வாழும் முதியோர்களின் வீட்டிற்கு வரும் இளம் மற்றும் முதிய தொண்டூழியர்கள் அவர்களுடன் உரையாடுவார்கள். சிறிய வேலைகளில் உதவி செய்து அவர்களை வெளியே அழைத்துச் செல்வார்கள்.

இது, புதிய ‘சில்வர் சர்க்கிள்’ திட்டத்தின்கீழ் செயல்படுத்தப்படுகிறது. சனிக்கிழமை (மே 9) சுகாதார அமைச்சர் ஓங் யி காங், சமூக வருகை மேற்கொண்டபோது இத்திட்டம் தொடங்கப்பட்டது.

தொண்டூழியர்கள், உதவி தேவைப்படும் மூத்தவர்களை அடையாளம்கண்டு அவர்களுடன் நட்புறவுடன் பழகி பல்வேறு நடவடிக்கைகளின் மூலம் அவர்களுக்குத் துணையாக இருப்பார்கள்.

இதற்காகத் துடிப்பாக மூப்படையும் நிலையங்கள், மூத்தோர் தலைமுறை அலுவலகத்துடன் தொண்டூழியர்கள் இணைந்து செயல்படுகின்றனர்.

மளிகைப் பொருள்களை வாங்க அல்லது காலை உணவு சாப்பிட முதியோர்களை தொண்டூழியர்கள் வெளியே அழைத்துச் செல்வார்கள் என்று பீஷான்-தோ பாயோ குழுத் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினரான சாய் யின்சாவ் தெரிவித்தார்.

சமூக வாழ்க்கையுடன் முதியோர்களை மறுபடியும் இணைப்பது திட்டத்தின் நோக்கமாகும். அவர்கள் வெளியே வந்து நட்பை வளர்த்துக் கொண்டு சுறுசுறுப்பான வாழ்க்கைத் திட்டங்களில் பங்கேற்பதைத் திட்டம் ஊக்குவிக்கிறது.

2030ஆம் ஆண்டுக்குள் நான்கில் ஒரு சிங்கப்பூரருக்கு வயது 65க்கு மேல் இருக்கும் என்று திரு சாய் தெரிவித்தார்.

தோ பாயோவின் மத்திய வட்டாரத்தில் பாதி பேர் ஏற்கெனவே 50 வயதை எட்டியவர்களாக இருக்கின்றனர்.

குடியிருப்பாளர்களின் வீடுகளுக்குச் சென்றபோது மூத்தவர்களில் சிலர் தனியாக அல்லது தங்களுடைய வயதான துணைவர் அல்லது உடன்பிறந்தோருடன் வசிப்பதைக் கண்டதாக அவர் கூறினார்.

அவர்களில் சிலர் நடப்பதற்குச் சிரமப்படுகின்றனர். அவர்களுக்கு தன்னம்பிக்கை இல்லாததால் வீட்டைவிட்டு வெளியே வரத் தயங்கலாம் என்றும் அவர் தெரிவித்தார்.

2025ல் அறிவிக்கப்பட்ட நலமாக மூப்படையும் அக்கம்பக்கத் திட்டம், முதன் முதலில் தோ பாயோவில் தொடங்கப்பட்டது. இதன்வழி முதியோர்களுக்குத் துடிப்புடன் மூப்படையும் பல திட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டு சமூக அடிப்படையில் ஆதரவு வழங்கப்படுகிறது.

பிடோக், புக்கிட் பாஞ்சாங், தியோங் பாரு-ரெட்ஹில் ஆகிய இடங்களிலும் நலமாக மூப்படையும் அக்கம்பக்கத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

நலமாக மூப்படையும் அக்கம்பக்கத் திட்டம் மூலமாக தோ பாயோ மத்திய வட்டாரத்தில் மூத்த குடிமக்களுக்குப் பல சேவைகள் இருப்பதாக திரு சாய் கூறினார்.

புதிய துடிப்பாக முதுமையடையும் நிலையங்கள், தனிநபர் சேவை விரிவாக்கம், அதிக சுகாதார மற்றும் சமூக நடவடிக்கைகள் அவற்றில் சில.

அண்மைய ஆண்டுகளாக கண்டறியப்படாத, தனிமையான மரணங்கள் தொடர்பான பல சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. இவற்றில் வீட்டில் இறக்கும் முதியோர்கள் சில நாள்கள் அல்லது சில வாரங்களுக்குப் பிறகே கண்டுபிடிக்கப்படுகின்றனர்.

2024 டிசம்பரில் ஜூரோங் வீட்டில் ஒரு தம்பதியினர் இறந்து கிடந்தனர். அக்கம்பக்கத்தில் வசிப்போர் துர்நாற்றம் வீசுவதாகக் கூறியதைத் தொடர்ந்து அவர்கள் இறந்துகிடந்தது தெரியவந்தது.

குறிப்புச் சொற்கள்