தேசத்தின் நிலைத்தன்மையே குடும்பங்களுக்கு மகிழ்ச்சியையும், இளம் தலைமுறைக்கு நம்பிக்கையையும் அளிக்கும் என்பதால், தேசத்தின் எதிர்காலத்துக்கு மூத்த தலைமுறையினர் அரும்பாடு பட்டதாகக் கூறியுள்ளார் பிரதமர் லாரன்ஸ் வோங்.
சிங்கப்பூரின் செழிப்பும் நிலைத்தன்மையும் தற்செயலாக நிகழ்ந்ததன்று என்றும், பல்வேறு குடும்பங்கள் இவ்வகை நம்பிக்கையைச் சுமந்து உழைத்ததே காரணம் என்றும் தமது தேசிய தின உரையில் குறிப்பிட்டார்.
“ஒவ்வொரு சிங்கப்பூர்க் குடும்பத்தின் வாழ்வும் ஏற்ற இறக்கங்கள் நிறைந்ததாகவே இருந்துள்ளன. அதற்கு எனது குடும்பபும் விதிவிலக்கல்ல,” என்ற திரு வோங் தமது தாய்வழித் தாத்தாவின் வாழ்க்கைக் கதையைப் பகிர்ந்தார்.
தமது தாய்வழித் தாத்தா ஈஸ்ட் கோஸ்ட் பகுதியில் கம்போங் ஆம்பரில் வாழ்ந்ததாகக் கூறிய பிரதமர் வோங், “அந்தக் காலத்தில் வாழ்க்கை நடத்துவது கடினமாக இருந்தது. கல்வி இல்லாத காரணத்தினால் அவர் மீன்பிடித் தொழில் மேற்கொண்டார். எனது பெற்றோருக்கும் கல்வி வாய்ப்புகள் குறைவாகவே இருந்தன,” என்றார்.
பெரும்பாலும் அனைவரும் தொடக்கப்பள்ளி முடித்தவுடன் பணிக்குச் சென்று குடும்பத்துக்கு ஆதரவளிக்க வேண்டிய சூழல் இருந்தாலும் நல்வாய்ப்பாகத் தமது தாயருக்கு கல்வி கற்கும் வாய்ப்பு கிடைத்ததையும் சுட்டிக்காட்டினார்.
பின் தமது காலத்தில் உயர்நிலைக் கல்வி வாய்ப்புகள் பலருக்கும் கிட்டியதையும், அதனைத் தொடர்ந்த தலைமுறைகளுக்குப் பரவலாகக் கல்வி வாய்ப்பு கிடைப்பதையும் குறிப்பிட்டார்.
தற்போது கிட்டத்தட்ட அனைவருமே தொழிநுட்பக் கல்விக்கழகம், பலதுறைத் தொழிற்கல்லூரி அல்லது பல்கலைக்கழகங்களுக்குச் செல்வதாகக் கூறினார். மேலும், கல்வி கற்கும் பருவம் முடிந்தாலும் வாழ்க்கை முழுதும் திறன்களை மேம்படுத்தும் வாய்ப்புகள் கிடைப்பதாகவும் சொன்னார்.