சிங்கப்பூர் கடந்த ஆண்டு சிறப்பாகச் செயல்பட்டபோதிலும் உலகம் இன்னும் சிக்கலானதாக நீடிப்பதால், மதிப்புமிக்கவர்களாக நீடிக்க சிங்கப்பூரர்கள் தங்களைத் தாங்களே மேம்படுத்திக் கொள்வதைத் தொடரவேண்டும் என்று மூத்த அமைச்சர் லீ சியன் லூங் வலியுறுத்தி உள்ளார்.
போட்டித்தன்மையுடன் நீடிக்கவும் நல்ல வேலைகளைத் தொடர்ந்து பெறவும் சிங்கப்பூரர்கள் நிச்சயமற்ற உலகிற்கு ஏற்ப தங்களை மாற்றிக்கொண்டு, திறன்களைப் புதுப்பித்துக்கொள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அங் மோ கியோ குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான திரு லீ, டெக் கீ கல்வி விருது வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசினார். டெக் கீ குடிமக்கள் ஆலோசனைக் குழுவின் கல்வி உதவிநிதி நிகழ்வும் விருது நிகழ்ச்சியோடு சேர்ந்து நடத்தப்பட்டது. அந்த இரு நிகழ்வுகளும் டெக் கீ தொடக்கப் பள்ளியில் சனிக்கிழமை (ஜனவரி 17) நடைபெற்றன.
அந்நிகழ்வுகளில் டெக் கீ வட்டாரத்தைச் சேர்ந்த 900க்கும் மேற்பட்ட மாணவர்கள் விருதுகளைப் பெற்றனர்.
நன்னடத்தை, தலைமைத்துவம், கல்வி செயல்திறன் ஆகிய நற்பண்புகளுக்காக அந்த விருதுகள் வழங்கப்பட்டன.
விருதுபெற்ற மாணவர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்களுக்கு மத்தியில் மூத்த அமைச்சர் லீ உரையாற்றினார்.
“கடந்த ஆண்டு சிங்கப்பூரின் பொருளியல் கிட்டத்தட்ட ஐந்து விழுக்காடு வளர்ச்சியடைந்து சாதித்ததன் காரணமாக சம்பளங்கள் கூடின. அதேநேரம், பணவீக்கம் குறைந்துள்ளது.
“நமது துறைமுகமும் சாங்கி விமான நிலையமும் தொடர்ந்து சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றன. அந்த இரண்டும் முன்னைய சாதனைகளை முறியடித்துள்ளன.
தொடர்புடைய செய்திகள்
“சிங்கப்பூர் துறைமுக ஆணையம் கடந்த ஆண்டு 44 மில்லியனுக்கும் மேற்பட்ட சரக்குக் கொள்கலன்களைக் கையாண்டு சாதனை படைத்தது.
“அதேபோல, சாங்கி விமான நிலையம் கடந்த ஆண்டு 70 மில்லியன் பயணிகளைக் கையாண்டுள்ளது. அதுவும் ஒரு சாதனை. குறிப்பாக, கொவிட்-19 பெருந்தொற்றுக்கு முந்திய பயணிகளின் எண்ணிக்கையைக் காட்டிலும் அது அதிகம்.
“எனவே, சிக்கலான உலகிலும் நாம் சிறப்பாக உள்ளோம். உலகின் பல நாடுகளும் பன்னாட்டு நிறுவனங்களும் முதலீட்டாளர்களும் சிங்கப்பூரை மிகவும் விரும்புவதாகத் தெரிவித்துள்ளன.
“இவ்வாறு சிங்கப்பூர் சிறந்து விளங்க என்ன காரணம்? நாம் நிலையாக உள்ளோம். சிக்கல்களை முன்கூட்டி கணிக்கக்கூடியவர்களாக உள்ளோம். பாதுகாப்பாக உள்ளோம். நம்பத்தகுந்தவர்களாக நீடிக்கிறோம்.
“இப்படி நாம் தனித்து விளங்குவதால் வர்த்தகம் புரிவதற்கான நல்லதொரு இடமாகவும் விரும்பத்தகுந்த வர்த்தகக் கூட்டாளியாகவும் சிங்கப்பூர் மாறியுள்ளது.
“ஆகவே, இந்த ஆண்டையும் இனி வரும் ஆண்டுகளையும் நாம் நம்பிக்கையுடன் எதிர்நோக்குவோம்,” என்று திரு லீ தமது உரையில் குறிப்பிட்டுள்ளார்.
வர்த்தக ஏற்ற இறக்கம் போன்ற உலகளாவிய நிச்சயமற்ற போக்கால் சிங்கப்பூரர்களும் இங்குள்ள நிறுவனங்களும் திறன்களோடு விளங்கவேண்டும் என்றும் திறன்களை மேம்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

