பாவாடைக்குள் படம் எடுத்த சந்தேகத்தின் பேரில் டோபி காட் எம்ஆர்டி நிலையத்தில் ஆடவர் ஒருவரை பொதுமக்கள் துரத்திப் பிடித்தனர்.
அந்தச் சம்பவம் வெள்ளிக்கிழமை (மே 15) இரவு நிகழ்ந்தது.
அந்த எம்ஆர்டி நிலையத்தில் ஆடவர் ஒருவர், மற்றொரு பெண்ணை உரசிக்கொண்டு மின்படிக்கட்டுகளில் வேகமாக இறங்கியதைக் காட்டும் காணொளிகள் இணையத்தில் பரவின.
அந்த ஆடவரைப் பிடிக்குமாறு ஒருவர் உரக்கக் கத்துவதையும் மற்றொருவர் காமவெறியன் என்று மாண்டரின் மொழியில் கூறுவதையும் அந்தக் காணொளியில் கேட்க முடிந்தது.
கூட்டத்திற்குள் புகுந்து வேகமாக ஓடிய ஆடவரை பலரும் துரத்தினர். அப்போது கீழே விழுந்த ஆடவர் பிடிபட்டார். அதன் பின்னர் கிழிந்த சட்டையுடன் அவர் காணப்பட்டார். அவர் வைத்திருந்த தேநீர் எம்ஆர்டி நிலையத்தின் தரையில் கொட்டிக் கிடந்தது.
ஆடவரைத் துரத்தியோரில் ஒருவரான பெண், சோமர்செட் எம்ஆர்டி நிலையத்திலிருந்து அந்த ஆடவர் தம்மைப் படம் எடுத்துக்கொண்டிருந்ததாகக் கூறினார் என எம்எஸ் நியூஸ் தெரிவித்தது.
ஆரஞ்சு நிற உடையணிந்த ஆடவர் ஒருவரின் துணையோடு டோபி காட் வரை சந்தேக நபரை அந்தப் பெண் பின்தொடர்ந்தார். சந்தேக நபரைத் துரத்திப் பிடித்தவர்களில் அந்த ஆடவரும் ஒருவர்.
அவர் பிடிபட்ட இடத்திற்கு எஸ்பிஎஸ் டிரான்சிட் ஊழியர்கள் வந்ததும், தாம் பாவாடைக்குள் படம் எடுக்கவில்லை என்று சந்தேக நபர் மறுத்ததோடு வேண்டுமானால் தமது கைப்பேசியைச் சோதித்துக்கொள்ளலாம் என்று கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
அதனைச் சோதிக்க எம்ஆர்டி நிலையத்தின் அலுவலகத்திற்கு அவர் கொண்டு செல்லப்பட்டார்.
சம்பவத்தன்று இரவு 10 மணியளவில் 11 ஆர்ச்சர்ட் ரோடு என்னும் முகவரியிலிருந்து உதவி கேட்டு அழைப்பு வந்ததாக, ஏஷியாஒன் ஊடகத்திடம் காவல்துறை கூறியது.
30 வயது மதிக்கத்தக்க அந்த ஆடவர் உடலில் லேசான காயங்கள் இருந்தபோதிலும் மருத்துவமனைக்குச் செல்ல மறுத்துவிட்டதாகக் கூறிய காவல்துறை, விசாரணைக்கு அவர் உதவி வருவதாகத் தெரிவித்தது.

