சமூக முன்னேற்றம் என்பது சவாலாகி வரும் வேளையில், உலக வர்த்தகப் பதற்றங்களுக்கும் இடையூறுகளுக்கும் இடையில் சிங்கப்பூரர்கள் தொடர்ந்து முன்னேறுவதற்கான புதிய அணுகுமுறைகள் தேவைப்படலாம் என்று சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சர் மசகோஸ் ஸுல்கிஃப்லி தெரிவித்து உள்ளார்.
அனைத்துலக சமூக மாநாட்டில் நிறைவுரையாற்றியபோது அவர் இவ்வாறு கூறினார்.
அவர் தமது உரையில் மேலும் தெரிவிக்கையில், “இதற்கு முன்னரும் இப்போதும் நாம் பெற்று வரும் சேவைகள் நாளை இருக்குமா என்பது தெரியாது.
“எனவே மாற்றங்களை நாம் துணிச்சலுடன் ஏற்படுத்த வேண்டும். தேவைப்பட்டால், நமது அடிப்படைக் கொள்கைகளை மறுஆய்வு செய்யலாம். அவ்வாறு செய்வது சமூக முன்னேற்றம் மீதான நமது அணுகுமுறை அவ்வப்போது புதுப்பிக்கப்படும் என்ற உறுதியை ஏற்படுத்தும்,” என்றார் திரு மசகோஸ்.
சேண்ட்ஸ் எக்ஸ்போ மாநாட்டு நிலையத்தில் நடைபெற்ற இரு நாள் மாநாடு புதன்கிழமை (ஏப்ரல் 30) நிறைவுபெற்றது.
சமுதாய, குடும்ப மேம்பாடு அமைச்சும் கொள்கை ஆய்வுக் கழகமும் இணைந்து நடத்திய அந்த மாநாட்டில் கல்விமான்களும் கொள்கை வகுப்போரும் பங்கேற்று தங்களது சமூக முன்னேற்றம் தொடர்பான ஆராய்ச்சிகளையும் திட்டங்களையும் பகிர்ந்துகொண்டனர்.
மாநாட்டில் திரு மசகோஸின் உரை காணொளிப் பதிவாக இடம்பெற்றது.
மாறாது நீடிக்கும் நம்பிக்கைகள் 60 ஆண்டுகளாக சிங்கப்பூர் செழிப்படைய உதவியது என்றார் அவர்.
தொடர்புடைய செய்திகள்
மேலும், தகுதிக்கு முன்னுரிமை என்னும் அணுகுமுறை திறன்படைத்த, கடுமையாக உழைக்கக்கூடிய சிங்கப்பூரர்கள் நேர்மையான வழியில் முன்னேற உதவுகிறது என்றும் திரு மசகோஸ் தெரிவித்தார்.

