ஹேக் அவென்யூவில் உள்ள இரண்டு கூட்டுரிமை வீட்டுக் கட்டடங்களில் அனுமதி பெறாமல் மேற்கூரை அமைப்புகள் பொருத்தப்பட்டிருப்பது குறித்து நகர மறுசீரமைப்பு ஆணையமும் கட்டட, கட்டுமான ஆணையமும் விசாரித்து வருகின்றன.
ரோஸ் மேன்சன், இஐஎஸ் ரெசிடன்சஸ் கூட்டுரிமை வீட்டு உரிமையாளர்கள் விதிமீறியிருக்கலாம் என பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட கருத்துகளின் அடிப்படையில் விசாரணை நடைபெறுகிறது.
விசாரணைக்கு உள்ளாகும் அமைப்புகளில் ஒன்று, நான்கு மாடி ரோஸ் மேன்சன் கட்டடத்தில் உள்ளது. அது, கண்ணாடியால் மூடப்பட்ட இடமாகத் தெரிகிறது. செடிகள், இருக்கைகளுடன் அந்த இடம் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
ஐந்து மாடி இஐஎஸ் ரெசிடன்சஸ் கட்டடத்தில் உள்ள மேற்கூரை அமைப்பில் நீள சதுர வடிவிலான, சன்னல்களைக் கொண்ட அறை ஒன்று உள்ளது.
ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சின் கேள்விகளுக்குக் கூட்டாக பதிலளித்த இரு ஆணையங்களும், அந்த அமைப்புகளின் ஒன்றின் கட்டுமான உறுதித்தன்மையில் பாதிப்பு எதுவும் இல்லாததை கட்டட, கட்டுமான ஆணையம் மதிப்பீடு செய்துள்ளதாகக் கூறின.
தற்போது விசாரணை நடைபெறுவதால் தங்களால் கூடுதல் விவரங்களைப் பகிர இயலாது என்றும் அவை கூறின.
சட்டவிரோதமாக எழுப்பப்பட்டிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படும் அந்த மேற்கூரை அமைப்புகள் குறித்து அதிகாரிகளுக்குத் தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து, கடந்த ஜூன் மாதம் அவ்விரு அமைப்புகளில் ஒன்றில் விசாரணை தொடங்கியதாக அறியப்படுகிறது.
அந்த மேற்கூரை அமைப்புகளுக்கான கட்டடத் திட்டங்களை அதிகாரிகளின் ஒப்புதலுக்கு வீட்டு உரிமையாளர்கள் சமர்ப்பித்தனரா என்பது பற்றித் தெரியவில்லை.
தொடர்புடைய செய்திகள்
சம்பந்தப்பட்ட இரு கூட்டுரிமைக் கட்டடங்களில் வசிப்பவர்கள், இந்த நிலவரம் குறித்து மௌனம் காக்கின்றனர். இந்த விவகாரம் குறித்து ரோஸ் மேன்சன் நிர்வாகக் குழு கருத்துரைக்கவில்லை.