கட்டட தரைத்தளப் பரப்பளவுக்கான வழிகாட்டி நெறிமுறைகள் மறுஆய்வு: சீ ஹொங் டாட்

கட்டட தரைத்தளப் பரப்பளவுக்கான வழிகாட்டி நெறிமுறைகள் மறுஆய்வு: சீ ஹொங் டாட்

படம்: பிசினஸ் டைம்ஸ்

22 Sep 2026 - 1:17 pm

2 mins read

சிங்கப்பூரில் கட்டட வடிவமைப்பில் கூடுதலான நீக்குப்போக்கை வழங்கக் கட்டட தரைத்தளப் பரப்பளவிற்கான வழிகாட்டிகளை அரசாங்கம் மறுஆய்வு செய்கிறது. அது, கட்டடம் கட்டுவதற்கான சாத்தியங்களையும் திட்டங்களின் நம்பகத்தன்மையையும் மேம்படுத்தக்கூடும்.

தேசிய வளர்ச்சி அமைச்சர் சீ ஹொங் டாட் திங்கட்கிழமை (செப்டம்பர் 21) அறிவித்த மொத்தத் தளப் பரப்புக்கான வழிக்காட்டிகளின் மறுஆய்வு, வெப்பத்தை எதிர்கொள்ளும் ஆற்றலை ஆதரிக்கும் கட்டட அம்சங்களை ஊக்குவிப்பதிலும் கவனம் செலுத்தும்.

அனுமதிக்கப்பட்ட மொத்தத் தளப் பரப்பின் அளவை அதிகரிப்பது அல்லது அதன் பயன்பாட்டு அமைப்பில் கூடுதலான நீக்குப்போக்குத் தன்மையை வழங்குவது, கட்டடங்களைக் கட்டுவதற்கான சாத்தியங்களையும் ஒரு திட்டத்தின் பொருளியல் பலன்களையும் கணிசமாக மேம்படுத்தும்.

மேலும், பாதுகாக்கப்பட்ட கட்டடங்களைப் புதுப்பிப்பதை ஊக்குவிக்கும் வகையில் மொத்தத் தளப் பரப்பின் அளவைக் கூட்டுவது குறித்தும் அண்மையில் கலந்துரையாடப்பட்டது.

நகர மறுசீரமைப்பு ஆணையத்தால் மேற்கொள்ளப்படும் மறுஆய்வு, தொழில்துறையினரின் கருத்துகளுக்கு இணங்க நடத்தப்படுகிறது என்றார் திரு சீ.

சிங்கப்பூர் நிறுவன விருதுகள் 2026ன் தொடக்க விழாவில் பேசிய அவர், மறுஆய்வு குறித்த விவரங்கள் தயாரானவுடன் பகிர்ந்துகொள்ளப்படும் என்றார்.

மாறிவரும் வணிகச் சூழலுக்கேற்ப கொள்கைகளும் விதிமுறைகளும் புதுப்பிக்கப்பட வேண்டும் என்ற திரு சீ, அதேவேளை, தொழில்முனைவோருக்குச் சாதகமாகச் செயல்படுவது என்றால் குறைவான விதிகளைக் கொண்டிருப்பது என்று அர்த்தமாகிவிடாது என்றார்.

“அப்படியென்றால் சிறந்த விதிகளைக் கொண்டிருப்பதாகும்: தேவையற்ற செலவுகள், காலதாமதங்கள், வணிகங்களுக்கான தடைகளைக் குறைக்கும் அதேவேளை, விரும்பிய ஒழுங்குமுறை முடிவுகளை அடையக்கூடிய விதிகள்,” என்று திரு சீ விளக்கம் அளித்தார்.

ஆன்சன், செசில் ஸ்திரீட் பகுதிகளில் தகுதிபெறும் மேம்பாடுகள் 30 விழுக்காடுவரை கூடுதல் மொத்தத் தளப் பரப்பைப் பெற முடியும்.

ராபின்சன் சாலை, ‌ஷென்டன் வே, தஞ்சோங் பகார் ஆகியவற்றில் உள்ள மேம்பாடுகள் 25 விழுக்காடு வரை கூடுதல் மொத்தத் தளப் பரப்பைப் பெற முடியும்.

குறிப்புச் சொற்கள்
கட்டடம்நகர மறுசீரமைப்பு ஆணையம்மறுஆய்வுவழிகாட்டி நெறிமுறை