மெக்சிகோவில் அண்மையில் நிகழ்ந்த வன்செயல்கள் காரணமாக, அங்குள்ள சிங்கப்பூரர்கள் விழிப்புடனும் எச்சரிக்கையுடனும் நடந்துகொள்ளுமாறு சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சு வலியுறுத்தி உள்ளது.
மெக்சிகோவில் நீண்டகாலமாகத் தேடப்பட்டு வந்த கும்பல் தலைவர் ஒருவர் கொல்லப்பட்ட பின்னர் அங்கு வன்செயல்கள் மூண்டதைத் தொடர்ந்து அமைச்சின் எச்சரிக்கைக் குறிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
‘எல் மென்சோ’ என்று அழைக்கப்படும் போதைப்பொருள் கும்பல் தலைவர் பிப்ரவரி 22ஆம் தேதி ராணுவ நடவடிக்கையில் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து மெக்சிகோவில் ஆங்காங்கே வன்செயல்கள் பரவின.
அதன் காரணமாக ஜெலிஸ்கோ, மிச்சோகான் உள்ளிட்ட சில மெக்சிகோ மாநிலங்களில் பதற்றமான சம்பவங்கள் நிகழ்ந்தன.
அமைதி குலைந்த மாநிலங்களில் இருக்கும் சிங்கப்பூரர்கள் மிதமிஞ்சிய எச்சரிக்கையுடனும் விழிப்புடனும் இருக்குமாறும் எல்லாவிதமான முன்னெச்சரிக்கை முயற்சிகளிலும் ஈடுபடுமாறும் அமைச்சு கூறியுள்ளது.
ஆபத்து மிகுந்த மாநிலங்களுக்குச் செல்வதைத் தவிர்க்குமாறும் உள்ளூர்ச் செய்திகளைக் கவனித்து அதற்கேற்ப நடந்துகொள்ளுமாறும் சிங்கப்பூரர்களை அது கேட்டுக்கொண்டுள்ளது.

