காவல்துறையிடமிருந்து வருவது போன்ற போலி ‘பாப்-அப்’ எச்சரிக்கைகள் மூலம் அரங்கேற்றப்படும் தகவல் திருட்டு மோசடிகள் குறித்து பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
கணினிகள் அல்லது மடிக்கணினிகளில் இணையத்தைப் பயன்படுத்திக்கொண்டிருக்கும்போது, காவல்துறையிடமிருந்து வருவது போன்ற போலி எச்சரிக்கைச் செய்திகள் திரையில் தோன்றக்கூடும் என்று செவ்வாய்க்கிழமையன்று (பிப்ரவரி 24) வெளியிட்ட அறிக்கையில் காவல்துறை தெரிவித்துள்ளது.
அப்போது அந்த இணையப்பக்கங்கள் இயங்காமல் உறைந்து போனது போல் தோன்றும். அந்த எச்சரிக்கைகளில் சிங்கப்பூர் காவல் துறையின் சின்னங்கள் இடம்பெற்றிருக்கும் என்றும் சட்டத்தை மீறியதற்காக அபராதத் தொகை எஞ்சியிருப்பதாகக் கூறப்படும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
பாதிக்கப்பட்டவர்கள் அந்த ‘அபராதத்தை’ செலுத்தத் தங்களது வங்கி அட்டை விவரங்களை வழங்குமாறு தூண்டப்படுவார்கள்.
தங்களது அட்டைகளைப் பயன்படுத்தி அங்கீகரிக்கப்படாத பணப்பரிமாற்றங்கள் செய்யப்பட்டதை அறிந்த பின்னரே, தாங்கள் ஏமாற்றப்பட்டதை அவர்கள் உணர்கிறார்கள்.
இந்த மோசடியின் ஒரு பகுதியாக, இணைய உலாவியின் கட்டுப்பாடுகள் மற்றும் டாஸ்க் பாரை மறைக்க முழுத் திரை பயன்முறையைச் செயல்படுத்துவது அல்லது மவுஸ் கர்சரைக் மறைப்பது போன்ற தந்திரங்களை மோசடிக்காரர்கள் பயன்படுத்துகின்றனர்.
இத்தகைய சூழலை எதிர்கொள்பவர்கள், விசைப்பலகையில் Ctrl+Alt+Delete பொத்தான்களை அழுத்தி, ‘டாஸ்க் மேனேஜர்’ கருவியைத் திறந்து, அனைத்து செயலிகளையும் கட்டாயமாக வெளியேறச் செய்ய வேண்டும்.
“தனிநபர் கணினிகள் அல்லது மடிக்கணினிகளை ‘பூட்ட’ அல்லது ‘முடக்க’ சிங்கப்பூர் காவல் துறைக்கு அதிகாரம் இல்லை,” என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
தொடர்புடைய செய்திகள்
காவல்துறையிடமிருந்து வருவது போன்ற எந்தவொரு பாப்-அப் எச்சரிக்கைகளையும் புறக்கணிக்குமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
சந்தேகம் இருப்பின், 1799 என்ற எண்ணில் நாள்தோறும் 24 மணிநேரத்துக்கு இயங்கும் ScamShield தொடர்பு எண்ணை அழைத்துச் சரிபார்க்கலாம்.

