தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சிங்கப்பூர் ஆலையை விரிவுபடுத்தும் அமெரிக்க வேதி நிறுவனம்

2 mins read
d0131eae-d8d0-4493-b0ba-8075ea46d2c3
மெக்டெர்மிட் ஆல்ஃபா நிறுவனம் சிங்கப்பூரில் உள்ள அதன் ஆலையை விரிவுபடுத்துகிறது. அதன் மூலம் பல துறைகளில் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும். - படம்: மெக்டெர்மிட் ஆல்ஃபா நிறுவனம்

சிங்கப்பூரில் செயல்படும் அமெரிக்க நிறுவனம் ஒன்று துவாஸ் அவென்யூவில் உள்ள தனது ஆலையை விரிவுபடுத்துவதன் மூலம் கிட்டத்தட்ட 100 வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படவுள்ளன.

மின்சாதன உற்பத்தியில் பயன்படுத்தப்படும் வேதிப்பொருள்களைத் தயாரிக்கும் ஆர்கோமேக்ஸ் ஆலையில் மெக்டெர்மிட் ஆல்ஃபா மின்சாதனத் தீர்வுகள் என்ற அமெரிக்க நிறுவனம் பல மில்லியன் டாலர் முதலீடு செய்கிறது. அது ஆலையின் உற்பத்தியை இரட்டிப்பாக்கும்.

மெக்டெர்மிட் ஆல்ஃபா அமெரிக்க நிறுவனத்துக்கு சிங்கப்பூர் ஒரு முக்கிய நடுவமாக இருக்கிறது என்றார் பகுதிமின்கடத்திப் பிரிவின் துணைத் தலைவர் டோம் ஹன்சிங்கர்.

“சிங்கப்பூரில் மதிநுட்ப சொத்துக்குப் பெரிய அளவில் பாதுகாப்பு உண்டு. எனவே பெரும்பாலான மதிப்புமிக்க தயாரிப்புகளை இங்குத் தயாரித்து ஆசியாவுக்கு விநியோகம் செய்கிறோம்,” என்றார் அவர்.

ஆலையை விரிவாக்குவதன் மூலம் அடுத்த சில ஆண்டுகளில் ஏறக்குறைய 100 வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் என்றும் திரு ஹன்சிங்கர் கூறினார்.

செயல்திறன், தரநிலைக் கட்டுபாடு, பொறியியல், ஆராய்ச்சி, மேம்பாடு என பல துறைகளில் அந்த வேலை வாய்ப்புகள் அமைந்திருக்கும் என்றார் அவர்.

ஆர்கோமேக்ஸ் ஆலை சிங்கப்பூரில் உள்ள நிறுவனத்தின் ஒரே உற்பத்தி ஆலை. அங்கிருந்துதான் உலகளவில் உள்ள வாடிக்கையாளர்களுக்குப் பொருள்கள் உற்பத்தியாகின்றன. அந்த ஆசிய சந்தை நிறுவனத்தின் விற்பனையில் ஏறக்குறைய 60 விழுக்காட்டுப் பங்கு வகிக்கிறது.

சிங்கப்பூருக்கு உள்ள நற்பெயரும் அனைத்துலக அளவில் அதற்குள்ள இணைப்புகளும் முதலீடு செய்வதற்கு உகந்த இடமாக உள்ளது என்றார் திரு ஹன்சிங்கர்.

துவாஸ் வெஸ்ட் சாலை, ஜூ கூன் ஆகியவற்றில் உள்ள ஆலைகளில் தற்போது 250க்கும் அதிகமானோர் பணியாற்றுகின்றனர்.

குறிப்புச் சொற்கள்