சிங்கப்பூர் ஏற்றுமதிகளுக்கு அமெரிக்கா 12.5% வரி விதிக்கக்கூடும்

சிங்கப்பூர் ஏற்றுமதிகளுக்கு அமெரிக்கா 12.5% வரி விதிக்கக்கூடும்

2 mins read
18fcfaee-c138-4122-87a5-4d664579f0fd
தொழிலாளர்களைக் கட்டாயப்படுத்தி வேலை செய்ய வைத்து தயாரிக்கப்பட்ட எந்தவொரு பொருளும் சிங்கப்பூரிலிருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டதாக ஆதாரங்கள் எதுவும் இல்லை என்று வர்த்தக, தொழில் அமைச்சு தெளிவுபடுத்தியுள்ளது. - படம்: பிஸ்னஸ் டைம்ஸ்

சிங்கப்பூரிலிருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருள்களுக்குப் புதிய 12.5 விழுக்காடு வரி விதிக்கப்படலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொழிலாளர்களைக் கட்டாயப்படுத்தி வேலை செய்ய வைத்து தயாரிக்கப்படும் பொருள்களுக்கான தடையைச் சிங்கப்பூர் முறையாகச் சட்டமாக்கி, தீவிரமாக அமல்படுத்தத் தவறிவிட்டதாகக் கூறி இப்பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

எனினும், இப்பரிந்துரை உடனடியாக நடைமுறைக்கு வராது. இது குறித்த பொதுமக்களின் கருத்துக்கேட்பும், விசாரணைக் கூட்டங்களும் வரும் ஜூலை மாதத் தொடக்கத்தில் நடத்தப்பட்ட பின்னரே இறுதி முடிவு எடுக்கப்படும்.

அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பின் தலைமையின்கீழ் இயங்கும் அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி அலுவலகம், கடந்த மார்ச் மாதம் 12ஆம் தேதியன்று உலகளவில் 60 நாடுகளின் பொருளியல் செயல்பாடுகள் குறித்து விசாரணையைத் தொடங்கியது.

இதில், சிங்கப்பூர் உட்பட 54 நாடுகள், தொழிலாளர்களைக் கட்டாயப்படுத்தி வேலை செய்ய வைத்து தயாரிக்கப்படும் பொருள்களுக்குத் தடை செய்வதற்கான சட்டங்களை இயற்றவும் இல்லை, அவற்றை அமல்படுத்தவும் இல்லை என்று தெரியவந்துள்ளதாக அந்த அலுவலகம் கூறியது.

அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி அலுவலகத்தின் இந்தக் குற்றச்சாட்டுகளைச் சிங்கப்பூர் ஏற்கெனவே திட்டவட்டமாக மறுத்துள்ளது. இது குறித்துக் கடந்த ஏப்ரல் மாதம் விளக்கம் அளித்த சிங்கப்பூர் வர்த்தக, தொழில் அமைச்சு, தொழிலாளர்களைக் கட்டாயப்படுத்தி வேலை செய்ய வைத்து தயாரிக்கப்பட்ட எந்தவொரு பொருளும் சிங்கப்பூரிலிருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டதாக ஆதாரங்கள் எதுவும் இல்லை என்று தெளிவுபடுத்தியிருந்தது.

அதிபர் டிரம்ப்பின் முந்தைய உலகளாவிய வர்த்தக வரிகளுக்கான சட்டபூர்வ அடிப்படையைக் கடந்த பிப்ரவரி மாதத்தில் அமெரிக்க உச்ச நீதிமன்றம் ரத்து செய்ததைத் தொடர்ந்து, புதிய மற்றும் கடுமையான வரிகளை விதிக்கும் நோக்கில் இந்த அதிரடி விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன.

தொழிலாளர்களைக் கட்டாயப்படுத்தி வேலை செய்ய வைத்து தயாரிக்கப்படும் பொருள்கள் மூலம் நடக்கும் வர்த்தகம் அமெரிக்க வர்த்தகத்தைப் பாதிப்பதாகக் கூறி, அமெரிக்க வர்த்தகச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

“எங்கள் முக்கிய வர்த்தகப் பங்காளிகள் இத்தகைய தவறுகளைத் தடுக்கத் தவறுவது ஏற்றுக்கொள்ள முடியாதது. இது அமெரிக்க ஊழியர்களை உலகச் சந்தையில் சமமற்ற சூழலில் போட்டியிட நிர்பந்திக்கிறது,” என்று அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி அலுவலகத்தின் தலைவர் ஜேமிசன் கிரீர் தெரிவித்துள்ளார்.

இந்த வரிகள் தொடர்பான விசாரணைக் கூட்டங்கள் ஜூலை 7ஆம் தேதி தொடங்கவுள்ள வேளையில், இதில் கலந்துகொண்டு சாட்சியமளிக்க விரும்புவோர் ஜூன் 22க்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்றும் அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி அலுவலகம் அறிவித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்