சுட்டுக்கொல்லப்பட்ட மாது; இரவு முழுதும் நீடித்த போராட்டம்; பதற்றத்தில் மினியபொலிஸ்

2 mins read
0dcb4794-d569-4ad7-b846-b3d954522388
மினியபொலிஸ் நகரில் அமெரிக்க குடியேற்ற அதிகாரி ஒருவர் பெண் ஒருவரை தவறுதலாகச் சுட்டுக் கொன்ற சம்பவத்தால் அங்குப் போராட்டங்கள் வெடித்துள்ளன. - படம்: ராய்ட்டர்ஸ்

மினியபொலிஸ்: மினியபொலிஸ் நகரில் அமெரிக்க குடியேற்ற அதிகாரி ஒருவர் பெண் ஒருவரை தவறுதலாகச் சுட்டுக் கொன்ற சம்பவத்தால் அங்குப் போராட்டங்கள் வெடித்துள்ளன.

ரெனி நிக்கோல் குட், 37, என்ற அந்தப் பெண் தனது காரைக் கொண்டு குடியேற்ற அதிகாரிகள் மீது மோத முயன்றதாக மத்திய அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.

எனினும் இக்கருத்தை மறுத்த நகர மேயர், அந்தப் பெண்ணைத் துப்பாக்கியால்  சுட்ட அதிகாரி பொறுப்பற்ற முறையில் நடந்து கொண்டதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும் உயிரிழந்த நபரை உள்ளூர் பயங்கரவாதி என்று காவல்துறை குறிப்பிட்டுள்ளதற்கும் பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

உள்ளூர் நேரப்படி புதன்கிழமை (ஜனவரி 7) காலை 10.25 மணியளவில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளதாக அறியப்படுகிறது.

இந்தச் சம்பவம் தொடர்பாக உலாவரும் காணொளிகளில், குடிநுழைவு முகவர் ஒருவர் சாலையில் நின்றுகொண்டிருந்த காரை நெருங்குகிறார். 

மினியபொலிஸ் நகரின் குடியிருப்பு வீதிகளை அந்த வாகனம் மறித்து நிற்பதுபோலத் தென்படுகிறது. அப்போது சாலையில் நிறுத்தப்பட்டிருந்த அந்த வாகனத்தை அதிகாரிகள் கைப்பற்ற முயற்சிக்கின்றனர். மேலும் அதில் இருந்தவர்கள் தப்ப முயன்றனர் என்றும் அப்போது அதிகாரிகளில் ஒருவர் அந்தக் காரில் இருந்த பெண்ணைக் கீழே இறங்கும்படி கூறியதுபோலவும் காணொளிக் காட்சிகள் இடம்பெற்றிருந்ததாக ஊடகச் செய்திகள் கூறின.

எனினும், குறிப்பிட்ட அந்த வாகனம் அந்த இடத்திலிருந்து விரைவாகப் புறப்பட முற்பட்டபோது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. அந்தச் சூழலில் கட்டுப்பாட்டை இழந்த அந்த வாகனம் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மற்றொரு வாகனத்தின்மீது மோதி விபத்துக்குள்ளானது. 

இதற்கிடையே, இந்தச் சம்பவம் தொடர்பில் பலர் வீதிகளில் இறங்கி போராடியதால், இரவு முழுவதும் போராட்டங்கள் நீடித்தன. பதற்றம் நிலவுவதால் காவல்துறை குவிக்கப்பட்டுள்ளது.

விசாரணை தொடர்கிறது. வெள்ளை மாளிகையின் சட்டவிரோத குடியேற்றத்திற்கு எதிரான நடவடிக்கையின் ஒரு பகுதியாக, மினசோட்டா மாநிலத்தில் உள்ள மினியபொலிசுக்கு நூற்றுக்கணக்கான குடிநுழைவு அதிகாரிகள் அனுப்பப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்புச் சொற்கள்