சிங்கப்பூரின் உற்பத்தித் துறை வளர்ச்சி சென்ற மாதம் (மார்ச்) சற்று மெதுவடைந்துள்ளது.
மத்திய கிழக்கில் அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே மோதல் போக்கு முற்றியுள்ள நிலையில், சிங்கப்பூரின் உற்பத்தித் துறையில் அது சிறிதளவு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
நாட்டின் பொருளியல் வளர்ச்சிக்கு மின்னணுத் துறை தொடர்ந்து முக்கியப் பங்களிக்கிறது. செயற்கை நுண்ணறிவுக்கான உலகளாவிய தேவை அதிகமாக இருப்பது இதன் காரணம்.
இருப்பினும்,ஈரான் போரால் பாதிப்பு ஏற்படுவதற்கான அறிகுறிகள் தென்படுவதாகப் பொருளியல் ஆய்வாளர்கள் கருத்துரைத்துள்ளனர். அண்மையில் எரிபொருள் விலை அதிகரித்துவருவதையும் சரக்கு விநியோகத்தில் நிலவும் தாமதத்தையும் அவர்கள் சுட்டினர்.
உற்பத்தித் திறனை அளவிடும் ‘பிஎம்ஐ’ எனப்படும் கொள்முதல் மேலாளர் குறியீடு, 0.1 புள்ளி குறைந்து 50.5 ஆகப் பதிவாகியுள்ளது. பிப்ரவரியில் அது 50.6 புள்ளிகளாக இருந்தது.
இக்குறியீடு 50 புள்ளிகளுக்குமேல் இருந்தால் அது வளர்ச்சியைக் குறிக்கும் என்பதால், உற்பத்தித் துறை தொடர்ந்து எட்டாவது மாதமாக வளர்ச்சி கண்டிருப்பது உறுதியாகிறது.
இதர துறைகளில் வளர்ச்சி
வேலைவாய்ப்புக் குறியீடு (Employment index) தொடர்ந்து ஏழாவது மாதமாக வளர்ச்சியினைப் பதிவு செய்துள்ளது.
தொடர்புடைய செய்திகள்
அதேவேளையில், சரக்கு விநியோக வேகத்தைக் காட்டும் குறியீடு (Supplier deliveries index) தொடர்ந்து ஐந்தாவது மாதமாக, முன்னைவிட வேகமான சரிவைக் கண்டுள்ளது. இது சரக்குகள் வந்துசேர்வதற்கான கால இடைவெளி அதிகரித்துள்ளதைக் காட்டுகிறது.
இதற்கிடையே, உலகளாவிய அரசியல் சூழலில் நிலவும் நிச்சயமற்ற தன்மை, வரும் மாதங்களில் ஏற்றுமதி, விநியோகச் சங்கிலியில் மேலும் நெருக்குதலைக் கொடுக்கக்கூடும் என வல்லுநர்கள் கருதுகின்றனர்.
இந்நிலையில், உலகளாவிய சூழலையும் எரிபொருள் விலை உயர்வு போன்ற அம்சங்களையும் அணுக்கமாகக் கவனிக்க வேண்டியது அவசியம் என்று ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.

