வாஷிங்டன்: நீதிபதியை அவதூறாகப் பேசிய அமெரிக்க ஆடவருக்கு கிட்டத்தட்ட 600 நாள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
டேரல் ஜேரல் என ஊடகத்தால் அடையாளம் காணப்பட்ட அந்த ஆடவர் அத்துமீறி நுழைந்த குற்றச்சாட்டை எதிர்நோக்கி ஆகஸ்ட் 7ஆம் தேதி நீதிமன்றத்தில் முன்னிலையானார்.
அப்போது வாஷ்டெனாவ் கவுன்டி நீதிபதியான செட்ரிக் சிம்ப்சன் வழக்கை மற்றொரு தேதிக்கு ஒத்திவைத்தார்.
இதனால் எரிச்சல் அடைந்த ஜேரல், “இந்த மாநிலத்தில் நான் சோர்ந்துவிட்டேன். நான் உடனே இந்த மாநிலத்தைவிட்டுச் செல்ல விரும்புகிறேன்,” என்று ஜேரல் நேரடி நீதிமன்ற காணொளி விசாரணையின்போது கூறியுள்ளார். நீங்கள் என்னுடைய பின்பக்கத்தை முத்தமிடலாம் என்றும் அவர் சொல்லியிருந்தார்.
இதனால் அதிர்ச்சியடைந்த நீதிபதி சிம்சன், “உங்களுக்கு ஒன்று தெரியுமா, நீங்கள் இனிமேல் இங்கு வர வேண்டாம்,” என்றார்.
ஜேரன் உடனே தகாத வார்த்தையைப் பிரயோகித்ததாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து “இது, நீதிமன்ற அவமதிப்பு குற்றமாகும்,” என்று கூறிய நீதிபதி சிம்சன், “இதற்கு 93 நாள் சிறைத் தண்டனை,” என்றார்.
மேலும் கோபமடைந்த ஜேரல், மீண்டும் அவதூறாகப் பேசினார். நீதிபதி அவருக்கு மேலும் 93 நாள் சிறைத் தண்டனை விதித்தார்.
தொடர்புடைய செய்திகள்
அதிகாரிகள் ஜேரலை நீதிமன்ற அறையிலிருந்து அழைத்துச் சென்றபோதும் ஜேரல் மீண்டும் அவதூறு வார்த்தைகளைப் பயன்படுத்தி சாடியதாகச் சொல்லப்படுகிறது.
கடைசியில் அவருக்கு நீதிபதி சிம்சன் மொத்தம் 558 நாள் சிறைத் தண்டனை விதித்தார்.
ஜேரல் தற்போது சிறையில் இருப்பதாக ‘பீப்பிள்’ என்ற சஞ்சிகை தெரிவித்தது.
ஜேரல், தம் மீது சுமத்தப்பட்ட அத்துமீறி நுழைந்த குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டாரா என்பது தெரியவில்லை.