வாஷிங்டன்: அமெரிக்க ராணுவத்தின் பிளேக் ஹாக் ஹெலிகாப்டர் மேற்கு வாஷிங்டன் மாநிலத்தில் உள்ள ராணுவத் தளத்திற்கு அருகில் உள்ள புறநகர்ப் பகுதியில் விழுந்து நொறுங்கியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அந்த ஹெலிகாப்டரில் நான்கு சிறப்புப் படை வீரர்கள் இருந்தனர். அவர்களின் நிலை குறித்து அமெரிக்க ராணுவம் தகவல் வெளியிடவில்லை.
வழக்கமான பயிற்சியின்போது எம்எச்-60 பிளேக் ஹாக் ரக ஹெலிகாப்டர் உள்ளூர் நேரப்படி இரவு 9 மணியளவில் சமிட் லேக் என்ற புறநகர்ப் பகுதியில் விழுந்ததாக அமெரிக்க ராணுவம் சொன்னது.
அடர்ந்த காட்டுப்பகுதி என்பதாலும் ஆளரவமற்ற இடம் என்பதாலும் ஹெலிகாப்டர் விழுந்த இடத்தைச் சென்றடைவதில் அவசரப் பிரிவு அதிகாரிகள் சிரமத்தை எதிர்கொண்டனர்.
“அது மிகவும் தூரமான புறநகர்ப் பகுதி. அங்குச் செல்வது மிகவும் சிரமம். என்ன நடந்தது என்றும் தெரியவில்லை,” என்றார் லெஃப்டினண்ட் கர்னல் எலீ ஸ்காட்.
ஹெலிகாப்டருக்கும் ஆகாயப்படைத் தளத்துக்கும் இடையிலான தொடர்பு துண்டிக்கப்பட்டது என்றும் சம்பவ இடம் அடையாளம் காணப்பட்டுள்ளது என்றும் தர்ஸ்டன் மாவட்ட ஷெரிஃப் அலுவலகம் குறிப்பிட்டது.
ஹெலிகாப்டர் விபத்து குறித்த விசாரணை தொடர்கிறது.