சிங்கப்பூரிலிருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருள்கள் மீது விதிக்கப்பட்டுள்ள 10 விழுக்காடு அடிப்படை வரி தொடர்பாகப் பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா மறுத்துவிட்டதாகத் துணைப் பிரதமரும் வர்த்தக, தொழில் அமைச்சருமான கான் கிம் யோங் தெரிவித்துள்ளார்.
இந்த வரி விகிதம் எதிர்காலத்தில் அதிகரிக்கப்படுமா அல்லது குறைக்கப்படுமா என்பது குறித்தும் அமெரிக்கா பிடிகொடுத்துப் பேசவில்லை என்றார் அவர்.
திரு கான், ஜூலை 20ஆம் தேதி முதல் 26ஆம் தேதி வரை அமெரிக்காவுக்கு அதிகாரபூர்வப் பயணம் மேற்கொண்டார்.
மருந்துகளும் பகுதி மின்கடத்திகளும் சிங்கப்பூரிலிருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. தற்போதைய நிலவரப்படி அவற்றுக்கு வரி விதிக்கப்படவில்லை.
ஆனால், சிங்கப்பூரிலிருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் மருந்துகள் மீது வரி விதிக்க அமெரிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக அறியப்படுகிறது.
இதுகுறித்து, கலந்துரையாடவும் தமக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்றார் திரு கான்.
திரு கானின் நியூயார்க், வாஷிங்டன் பயணத்தின்போது மருந்து ஏற்றுமதி தொடர்பான கலந்துரையாடலுக்கு முன்னுரிமை தரப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
கலந்துரையாடல்கள் நடைபெறவில்லை என்றும் அமெரிக்க வர்த்தக அமைச்சர் ஹாவர்ட் லுட்னிக்கைச் சந்தித்துப் பேசும் வாய்ப்பு கிடைக்கவில்லை என்றும் செவ்வாய்க்கிழமையன்று (ஜூலை 29) எஸ்ஜி60 கொள்கை ஆய்வுக் கழகம்-சிங்கப்பூர் வர்த்தகச் சம்மேளன மாநாட்டில் திரு கான் தெரிவித்தார்.
தொடர்புடைய செய்திகள்
இருப்பினும், அமெரிக்க நிதி அமைச்சர் ஸ்காட் பெஸ்ஸென்ட், வர்த்தகப் பிரதிநிதி ஜேமிசன் கிரீர் உட்பட மற்ற அமெரிக்க அதிகாரிகளைச் சந்தித்ததாக அவர் கூறினார்.
சிங்கப்பூருக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான நீண்டகால, பரஸ்பர பலனளிப்புப் பொருளியல் உறவைக் கட்டிக்காக்கும் வழிகளைப் பற்றி கலந்துரையாடப்பட்டதாகத் திரு கான் தெரிவித்தார்.
மின்னிலக்கப் பொருளியல் போன்ற துறைகளில் இருநாடுகளுக்கும் இடையிலான உத்தேச ஒத்துழைப்பு குறித்தும் பேசப்பட்டதாக அவர் கூறினார்.
இதுவும் பயணத்தின் முக்கிய இலக்குகளில் ஒன்று என்று தெரிவிக்கப்பட்டது.
நியூயார்க்கில் வர்த்தகத் தலைவர்களையும் வாஷிங்டனில் வர்த்தக விவகாரங்களைக் கையாளும் அரசியல் தலைவர்களையும் திரு கான் சந்தித்தார். மேரிலேண்ட்டில் உள்ள எஸ்டி இஞ்சினியரிங்கின் விமானக் கட்டமைப்பு ஆலையை அவர் நேரில் சென்று பார்வையிட்டார்.
விதிக்கப்பட்டுள்ள அடிப்படை வரியைக் குறைப்பது தொடர்பாக கலந்துரையாடும் மனநிலையில் அமெரிக்க அரசாங்கம் இல்லை என்று மாநாட்டில் நடைபெற்ற கலந்துரையாடலில் திரு கான் தெரிவித்தார்.
“வரி விகிதம் குறித்து அமெரிக்கா இன்னமும் பரிசீலனை செய்துகொண்டிருக்கிறது. கூடிய விரைவில் அதுதொடர்பாக அறிவிக்கப்படும். எனவே, அதற்காகக் காத்திருக்க வேண்டும்,” என்றார் திரு கான்.
வாய்ப்பு கிடைத்தால் அடிப்படை வரி விகிதம் குறித்து பேச்சுவார்த்தை நடத்த சிங்கப்பூர் விரும்புகிறது என்று அமெரிக்க அதிகாரிகளிடம் தெரிவித்ததாக திரு கான் கூறினார்.

