கோல்கத்தா: அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்க்கோ ரூபியோ நான்கு நாள் அதிகாரத்துவப் பயணமாக இந்தியாவுக்குச் சென்றுள்ளார்.
சனிக்கிழமை அதிகாலை கோல்கத்தா விமான நிலையத்தில் இறங்கிய அவர் செவ்வாய்க்கிழமை (மே 26) வரை இந்தியாவில் இருப்பார். அப்போது, வர்த்தகம், தொழில்நுட்பம், தற்காப்பு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து இந்தியத் தலைவர்கள் மற்றும் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
தமது முதல் பணியாக சனிக்கிழமை காலை மத்திய கோல்கத்தாவில் உள்ள அன்னை தெரசாவின் அன்னை இல்லத்துக்குத் தமது மனைவியுடன் திரு ரூபியோ சென்றார். பின்னர், ஆதரவற்ற குழந்தைகள் வசிக்கும் நிர்மலா சிறுவர் இல்லத்துக்கு அவ்விருவரும் சென்றனர்.
பின்னர், பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திக்க புதுடெல்லிக்குப் புறப்பட்டுச் சென்றார் அவர்.
திரு ரூபியோவின் வருகையை முன்னிட்டு கோல்கத்தாவிலும் புதுடெல்லியிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டன.
ஞாயிறு மற்றும் திங்கட்கிழமைகளில் ஆக்ராவுக்கும் ஜெய்ப்பூருக்கும் திரு ரூபியோ செல்லவிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செவ்வாய்க்கிழமை நடைபெற இருக்கும் ‘குவாட்’ அமைப்பின் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்திலும் அவர் பங்கேற்க இருக்கிறார். இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் அந்தக் கூட்டத்திற்குத் தலைமை தாங்குவார்.
குவாட் அமைப்பில் அமெரிக்கா, இந்தியா, ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய நான்கு நாடுகள் இடம்பெற்றுள்ளன.
தொடர்புடைய செய்திகள்
திரு ரூபியோவின் இந்தப் பயணம், அமெரிக்கா, இந்தியா இடையேயான உறவை மேலும் வலுப்படுத்தும் என இந்தியாவுக்கான அமெரிக்கத் தூதர் செர்ஜியோ கோர் தெரிவித்துள்ளார்.
திரு ரூபியோ இந்தியாவுக்கு வந்திருப்பது இதுவே முதன்முறை. அத்துடன், 2012ஆம் ஆண்டுக்குப் பிறகு அமெரிக்க வெளியுறவு அமைச்சர் இந்தியா வந்திருப்பதும் இதுவே முதன்முறை ஆகும்.
2012ஆம் ஆண்டு வெளியுறவு அமைச்சராக இருந்த திருவாட்டி ஹில்லரி கிளிண்டன் 2012 மே மாதம் கோல்கத்தா விமான நிலையத்தில் இறங்கி இந்தியப் பயணத்தைத் தொடங்கினார்.
இந்தியாவுக்குப் புறப்படும் முன்னர் செய்தியாளர்களிடம் பேசிய திரு ரூபியோ, அமெரிக்காவின் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி ஆகியன தற்போது வரலாற்றுச் சிறப்புமிக்க உச்சநிலையில் உள்ளன. எங்களது ஆற்றல்மிக்க தயாரிப்புகளை இந்தியா போன்ற நாடுகளுக்கு இயன்ற அளவுக்கு விற்க விரும்புகிறோம்,” என்றார்.
ஹோர்முஸ் நீரிணை மூடப்படுவதால் ஏற்படும் எரிசக்தி விலைகளால் இந்தியா பாதிக்கப்படுவது குறித்த கேள்விக்குப் பதிலளித்த அவர், இந்தியாவை ஒரு சிறந்த கூட்டாளி என்று வர்ணித்தார்.

