அமெரிக்க வரி விதிப்பு சிங்கப்பூர் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகலாம்: சண்முகம்

2 mins read
1ac8b158-5b01-4bb6-8161-c4e41e081c13
விதிமுறைகள் அடிப்படையிலான உலகச் செயல்பாட்டு முறையை கைவிட்டுச் செல்வது என்பது ஒவ்வொரு நாடும் இனி தனது சொந்தப் பாதுகாப்பை தானே பார்த்துக்கொள்ள வேண்டும் என்று பொருள்படும் என்று உள்துறை அமைச்சர் சண்முகம் கூறியுள்ளார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

அமெரிக்க வரி விதிப்பு கொள்கையால் உலக நாடுகளுக்கு இடையிலான உறவு முறை அடிப்படை மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

அது உலக பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக விளங்கக்கூடும் என்று உள்துறை அமைச்சர் கா. சண்முகம் கூறியுள்ளார்.

விதிமுறைகள் அடிப்படையிலான உறவு முறையிலிருந்து மாறுவது என்பது ஒவ்வொரு நாடும் தனது பாதுகாப்பை தானே பார்த்துக்கொள்ள வேண்டும் எனப் பொருள்படும் என்று திரு சண்முகம் வியாழக்கிழமை (ஏப்ரல் 17ஆம் தேதி) விளக்கினார்.

இம்மாதம் 2ஆம் தேதி தனது வர்த்தகப் பங்காளி நாடுகளுக்கு எதிராக அமெரிக்கா ஒருசேர வரி விதித்த நிலையில் திரு சண்முகம் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதில் சிங்கப்பூர் உட்பட குறைந்தது 60 வர்த்தகப் பங்காளி நாடுகளிலிருந்து இறக்குமதியாகும் பொருள்களுக்கு அமெரிக்கா 10 விழுக்காடு வரி விதித்துள்ளது. மேலும், பன்மடங்கு உயர்ந்த வரியையும் குறைந்தது 60 வர்த்தகப் பங்காளி நாடுகள்மீது அமெரிக்கா விதித்துள்ளதை திரு சண்முகம் நினைவுகூர்ந்தார்.

“நமக்குப் பழக்கமான உலக முறை நிரந்தரமாக மாறிவிட்டதா அல்லது அமெரிக்க அதிபர் டிரம்ப்புக்கு மனமாற்றம் எற்படுமா என்பது தெரியவில்லை. ஆனால், உலகச் சூழல் மிகக் கடுமையாக மாறியுள்ளது. இனி பெரிய நாடுகள் வர்த்தகச் சலுகைகள் வழங்குவது, மேற்கொண்டு தடைகளை ஏற்படுத்துவது என இறங்கும். ஏனென்றால் இதில் அமெரிக்கா இறங்கியுள்ள நிலையில், மற்ற நாடுகளும் அதுபோல் நடக்க நேரிடும்,” என்று அமைச்சர் சண்முகம் தெளிவுபடுத்தினார்.

தற்பொழுது பிரதமர் லாரன்ஸ் வோங்கும் அவருடன் ஒத்த கருத்துடைய மற்ற உலகத் தலைவர்களும் உலக வர்த்தக முறையைக் கட்டிக் காப்பதில் முயற்சி மேற்கொண்டுள்ளதாக அமைச்சர் கூறினார்.

“இந்த முயற்சி அமெரிக்காவுக்கு மாற்றாக விளங்கப்போவதில்லை. ஏனெனில், நான் ஏற்கெனவே கூறியதுபோல், உலக உற்பத்திப் பொருள்களில் மூன்றில் ஒரு பங்கை அமெரிக்கா வாங்குகிறது. எனினும், ஒன்றுமில்லாததற்கு ஓரளவாவது இருக்கும் ஒழுங்கு முறை வரவேற்கக்கூடியதே,” என்று அமைச்சர் சண்முகம் சொன்னார்.

குறிப்புச் சொற்கள்