சிங்கப்பூரிலிருந்து அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கான வரி 15 விழுக்காடாக உயர்த்தப்படும் என்றும் அமெரிக்க அதிபர் டோனல்ட் ட்ரம்ப் பிப்ரவரி மாதம் சமூக ஊடகத்தில் பதிவிட்டிருந்தார்.
ஆனால் இதுகுறித்து அமெரிக்க அதிகாரிகள் இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை.
எனவே, வரிவிதிப்பு 10 விழுக்காடாகத் தொடரும் என்றும் வர்த்தக, தொழில் துணையமைச்சர் அமைச்சர் கான் சியாவ் ஹுவாங் தெரிவித்துள்ளார்.
அனைத்துலக அவசரகாலப் பொருளியல் அதிகாரச் சட்டத்தின்கீழ் விதிக்கப்பட்ட பரஸ்பர வரிகளை, அதிபர் டிரம்ப் தனது அரசியலமைப்பு அதிகாரத்தை மீறிச் செய்ததாகக் கூறி பிப்ரவரி 20ஆம் தேதியன்று அமெரிக்க உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது.
இருப்பினும், வர்த்தகச் சட்டத்தின் 122வது பிரிவின்கீழ் 10 விழுக்காடு உலகளாவிய வரியை விதிக்கும் புதிய நிர்வாக உத்தரவை வெள்ளை மாளிகை உடனடியாகப் பிறப்பித்தது. அதன் பிறகு, பிப்ரவரி 21ஆம் தேதியன்று ‘டுரூத் சோஷியல்’ பதிவில் இந்த வரி 15 விழுக்காடாக உயர்த்தப்படும் என டிரம்ப் அறிவித்தார்.
வியாழக்கிழமையன்று (மார்ச் 5) நாடாளுமன்றத்தில் இது குறித்து உரையாற்றினார் வெளியுறவுத் துணையமைச்சருமான திருவாட்டி கான்.
“இந்த வரி உயர்வு குறித்து அமெரிக்கா இன்னும் அதிகாரபூர்வ உத்தரவைப் பிறப்பிக்கவில்லை. 2025ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்துக்குள் விதிக்கப்பட்ட 10 விழுக்காடு வரியைப் போலவே தற்போதைய வரியும் இருப்பதால், சிங்கப்பூர் பொருளியலில் உடனடி பாதிப்பு பெரிய அளவில் இருக்காது.”
“இருப்பினும், அமெரிக்கத் தேவைகளை அதிகம் நம்பியிருக்கும் சிங்கப்பூரின் உற்பத்தித் துறைகள், குறிப்பாக துல்லியப் பொறியியல் மற்றும் சில பொதுவான உற்பத்திப் பிரிவுகள் அதிக பாதிப்பைச் சந்திக்கக்கூடும்,” என்று அவர் குறிப்பிட்டார்.
தொடர்புடைய செய்திகள்
பிரிவு 122ன் கீழ் விதிக்கப்படும் வரிகள் 150 நாள்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும். அதற்கு மேல் நீட்டிக்க அமெரிக்க நாடாளுமன்றத்தின் அனுமதி தேவை.
சிங்கப்பூரின் முக்கிய ஏற்றுமதிப் பொருள்களான மருந்துப் பொருள்கள் மற்றும் பகுதிமின்கடத்திகள் ஆகியவற்றுக்குத் தற்போது இந்த வரிகளிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

