அமெரிக்கா விதித்துள்ள புதிய 12.5 விழுக்காட்டு வரியால் சிங்கப்பூரிலிருந்து அந்நாட்டுக்குச் செய்யப்படும் ஏற்றுமதியில் ஏறத்தாழ $9.5 பில்லியன் மதிப்பிலான பொருள்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகத் துணைப் பிரதமரும் வர்த்தக, தொழில்துறை அமைச்சருமான கான் கிம் யோங் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். இது சிங்கப்பூரில் தயாரிக்கப்பட்டு அல்லது உற்பத்தி செய்யப்பட்டு அமெரிக்காவுக்குs செய்யப்படும் ஏற்றுமதியில் ஏறத்தாழ மூன்றில் ஒரு பங்காகும்.
முந்தைய 10 விழுக்காட்டு வரியுடன் ஒப்பிடுகையில், இப்புதிய நடவடிக்கை சிங்கப்பூர் ஏற்றுமதியின் மீதான ஒட்டுமொத்த வரி விகிதத்தை 0.7 விழுக்காட்டுப் புள்ளியாக உயர்த்தியுள்ளது. இக்கட்டுப்பாட்டால் ஒளியியல் கருவிகள், வேதிப் பொருள்கள் ஆகியவை பாதிக்கப்படும் வேளையில், எரிசக்தி, சில மின்னணுச் சாதனங்கள், வான்வெளி சார்ந்த பொருள்கள் மற்றும் தனித் தீர்வைக்கு உட்பட்ட மருந்துகள், பகுதிமின்கடத்திகள் ஆகியவற்றுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
கொத்தடிமை முறை மூலம் தயாரிக்கப்படும் பொருள்களின் இறக்குமதிக்குச் சிங்கப்பூர் தடை விதிக்காததால், சிங்கப்பூருக்கு 12.5 விழுக்காட்டு வரி விகிதம் நிர்ணயிக்கப்பட்டது. இருப்பினும், அமெரிக்காவினால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட 60 நாடுகளில் எந்தவொரு நாட்டுக்கும் முழுமையான வரிவிலக்கு அளிக்கப்படவில்லை என்று துணைப் பிரதமர் கான் சுட்டிக்காட்டினார்.
இறக்குமதித் தடைகளை விதிப்பது சிங்கப்பூரின் ஒட்டுமொத்த வர்த்தகச் சூழலிலும் பிற நாடுகளுடனான உறவிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால், சிங்கப்பூர் கவனமாக ஆலோசித்தே அடுத்தகட்ட முடிவை எடுக்கும் என்று திரு கான் கூறினார்.
தற்போதைய சூழலில், பாதிக்கப்பட்ட வர்த்தகங்களுக்கும் ஊழியர்களுக்கும் தேவையான ஆதரவை வழங்கி, நிலைமைக்கு ஏற்ப அவர்களைத் தயார்ப்டுத்துவதே அரசாங்கத்தின் முதன்மை இலக்காகும் என்றும் அவர் உறுதியளித்தார்.
வரிவிதிப்பின் தாக்கங்கள், பாதிக்கப்படும் ஏற்றுதியாளர்களுக்கு ஆதரவு வழங்க மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் ஆகியவை குறித்து இயோ சூ காங் தனித்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் யிப் ஹோன் வெங் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியிருந்தார்.
இதுதொடர்பான புள்ளிவிவரங்களுடன் துணைப் பிரதமர் கான் எழுத்துபூர்வமாகப் பதிலளித்தார்.


