வாகன நுழைவு அனுமதி (விஇபி) இல்லாமல் மலேசியாவுக்குச் சென்ற சிங்கப்பூர் வாகனமோட்டிகளுக்கு, அத்திட்டம் ஜூலையில் முழுமையாக அமல்படுத்தப்பட்டதிலிருந்து கிட்டத்தட்ட 1 மில்லியன் ரிங்கிட் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக மலேசியாவின் சாலைப் போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.
செப்டம்பர் 28 நிலவரப்படி, விதிமீறிய மொத்தம் 3,148 சிங்கப்பூர் ஓட்டுநர்களுக்கு 944,400 ரிங்கிட் (S$288,830) அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என சாலைப் போக்குவரத்துத் துறையின் தலைமை இயக்குநர் ஏடி ஃபட்லி ரம்லி கூறியதாக மலேசியாவின் பெரித்தா ஹரியான் செய்தித்தாள் செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 30) தெரிவித்தது.
ஜூலை 1 முதல், செல்லுபடியாகும் வாகன நுழைவு அனுமதி இல்லாமல் மலேசியாவுக்குச் செல்லும் சிங்கப்பூரில் பதிவுசெய்யப்பட்ட வாகனங்களுக்கு 300 ரிங்கிட் அபராதம் விதிக்கப்படுகின்றன.
வாகன நுழைவு அனுமதித் திட்டம் அமலுக்கு வந்த முதல் மாதத்தில் 1,489 ஓட்டுநர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டிருந்தது. அதனுடன் ஒப்பிடுகையில், இதுவரை அபராதம் விதிக்கப்பட்டுள்ள ஓட்டுநர்களின் எண்ணிக்கை இருமடங்கிற்குமேல்.
செவ்வாய்க்கிழமை இரவு செய்தியாளர்களிடம் பேசிய திரு ஏடி, “வாகன நுழைவு அனுமதித் திட்டம் உண்மையில் சாலைப் பாதுகாப்பை உறுதிசெய்யவும் மலேசியாவில் வெளிநாட்டு வாகனங்கள் தவறாகப் பயன்படுத்தப்படுவதைத் தடுக்கவும் ஒரு முக்கியமான முறையாகும்,” என்றார்.
விதிமீறியதால் அபராதம் விதிக்கப்பட்ட ஓட்டுநர்கள் உட்லண்ட்ஸ் கடற்பாலம், துவாஸ் இரண்டாம் இணைப்புப் பாலம் எனும் இரண்டு நிலச் சோதனைச் சாவடிகளிலும் ஜோகூர் பாருவில் சிங்கப்பூரர்கள் அடிக்கடி சென்றுவரும் பகுதிகளிலும் பிடிபட்டவர்கள் என்று சாலைப் போக்குவரத்துத் துறை ஆகஸ்ட்டில் தெரிவித்திருந்தது.
வாகன நுழைவு அனுமதித் திட்டத்தால், செல்லுபடியாகாத சாலை வரியையும் காப்புறுதியையும் தடுக்க முடியும் என்றும் சுங்கக் கட்டண வசூல் மற்றும் சாலைக் கட்டண முறையின் செயல்திறனை அதிகரிக்க முடியும் என்றும் திரு ஏடி கூறினார்.
ஆகஸ்ட் 31 நிலவரப்படி, வாகன நுழைவு அனுமதிக்கு 306,449 சிங்கப்பூர் வாகனங்கள் பதிவுசெய்துள்ளன என்றும் அவர் தெரிவித்தார்.