சிங்கப்பூரில் போதைப்பொருள் கலந்த மின்சிகரெட் புழக்கம் அண்மையில் அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து அது தொடர்பான சட்ட நடவடிக்கைகளை வலுப்படுத்துவது குறித்து அரசாங்கம் ஆராய்ந்து வருகிறது.
எடோமிடேட் மற்றும் பிற கட்டுப்படுத்தப்பட்ட பொருள்கள் மின்சிகரெட்டுகளில் பயன்படுத்தப்படுவது அண்மைய சம்பவங்களில் கண்டுபிடிக்கப்பட்டன.
இப்பிரச்சினையைச் சமாளிக்க அரசாங்க அமைப்புகள் அமலாக்க நடவடிக்கைகளை மேம்படுத்துவது குறித்து ஆலோசித்து வருகின்றன.
தற்போதைய அமலாக்கச் சட்டத்தை எந்த வகையில் வலுப்படுத்துவது என்பது ஆராயப்படும் என்று சுகாதார அமைச்சும் உள்துறை அமைச்சும் ஜூலை 12ஆம் தேதி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் தெரிவித்தன.
கேள்விக்கு விளக்கமளித்த இரு அமைச்சுகளும், இவ்வாண்டு முற்பாதியில் எடோமிடேட் கலந்த 28 மின்சிகரெட் சம்பவங்களை சுகாதார அறிவியல் ஆணையம் கண்டுபிடித்துள்ளதாகக் குறிப்பிட்டது.
சிங்கப்பூரில் மின்சிகரெட்டுகளைப் பயன்படுத்த 2018ஆம் ஆண்டில் தடை விதிக்கப்பட்டது.
2024 ஜனவரிக்கும் 2025 மார்ச்சுக்கும் இடையே மின்சிகரெட்டுகளுக்கு எதிராக அமலாக்க நடவடிக்கைகளை எடுக்கும் ஆணையம், $41 மில்லியன் மதிப்புள்ள மின்சிகரெட்டுகளையும் உபகரணங்களையும் கைப்பற்றியது.
“எடோமிடேட் மற்றும் கட்டுப்படுத்தப்பட்ட பொருள்களைப் பயன்படுத்தும் போக்கும் வெளிநாடுகளில் காணப்பட்டது, தற்போது சிங்கப்பூரிலும் காணப்படுகிறது,” என்று அமைச்சுகள் அறிக்கை வாயிலாகத் தெரிவித்தன.
தொடர்புடைய செய்திகள்
ஏப்ரலில் அரசு நீதிமன்றங்களுக்கு வெளியே மின்சிகரெட்டை ஊதி ஒழுங்கற்ற முறையில் நடந்த 13 வயது சிறுமி கைது செய்யப்பட்டார். அவரது வீட்டை சோதனையிட்டதில் ‘கேபாட்’ என்று குறிப்பிடப்படும் எடோமிடேட் கலந்த சாதனம் கண்டுபிடிக்கப்பட்டு, கைப்பற்றப்பட்டது.