அறைகலன்கள், பசைகள் போன்ற பொருள்களில் ‘ஃபார்மல்டஹைட்’ வேதிப்பொருள் பயன்பாட்டை அதிகாரிகள் மறுஆய்வு செய்கின்றனர்.
அந்த விவகாரத்தின் தொடர்பில் கூடுதல் நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்று ஐந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
அறைகலன்களில் அதிக அளவு ‘ஃபார்மல்டஹைட்’ இருந்ததால், சிலர் நோய்வாய்ப்பட்டதாக அண்மையில் ஊடக அறிக்கைகள் வெளிவந்தன.
ஒரு குடும்பம் தங்கள் இளம் பிள்ளைகள் அதிக அளவிலான அவ்வேதிப்பொருளால் தொடர்ந்து நோய்வாய்ப்பட்டதால், மரப்பலகைகளிலான அறைகலன்களுக்காக $1,000 செலவிட்டதாக கடந்த ஜூலையில் ‘சிஎன்ஏ’ அறிக்கை வெளியிட்டது.
கடந்த ஐந்து ஆண்டுகளில் புதிய அறைகலன்களில் அதிக அளவில் ‘ஃபார்மல்டஹைட்’ பயன்படுத்தப்பட்டதன் தொடர்பில் தேசிய சுற்றுப்புற வாரியத்திற்கு எத்தனை புகார்கள் வந்தன என்று ராடின் மாஸ் நாடாளுமன்ற உறுப்பினர் மெல்வின் யோங் கேள்வி எழுப்பினார்.
உட்புறங்களில் காற்றின் தரம், அறைகலன் பாதுகாப்புத் தரங்கள் ஆகியவற்றின் தொடர்பில் தற்போது நடப்பில் உள்ள விதிமுறைகளைப் புதுப்பித்து மறுஆய்வு செய்வதற்கான திட்டங்கள் குறித்து ஜாலான் புசார் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் வான் ரிஸால் கேள்வி எழுப்பினார்.
ஆகஸ்ட் 6ஆம் தேதி நாடாளுமன்றத்தில் பேசிய நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சின் மூத்த நாடாளுமன்றச் செயலாளர் பே யாம் கெங், வாரியம் அந்த விவகாரத்தைத் துடிப்புடன் ஆராய்வதாகக் கூறினார்.
2020ஆம் ஆண்டிலிருந்து, புதுப்பிப்புப் பணிகளால் ஏற்பட்ட ‘ஃபார்மல்டஹைட்’ அளவு குறித்து, வாரியத்திற்கு 19 புகார்கள் கிடைத்ததாகத் திரு பே தெரிவித்தார்.
தொடர்புடைய செய்திகள்
“அறைகலன் துறை ‘ஃபார்மல்டஹைட்’ வெளியேற்றத்தைக் குறைக்க முயற்சி செய்துள்ளது,” என்றும் அவர் கூறினார்.
சாயங்களில் அவ்வேதிப்பொருளைத் தடை செய்வதோடு, மரத்தாலான பொருள்கள், பசைகள் போன்ற பொருள்களில் அதன் பயன்பாடு குறித்து மறுஆய்வு செய்யப்படுவதாகவும் திரு பே சொன்னார்.


