தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சமையல் எண்ணெய்யில் இயங்கும் விமான நிலைய கனரக வாகனங்கள்

2 mins read
5079f763-e1b2-47e7-a97b-3db5ff9a2110
கனரக வாகனங்களுக்கும் இன்னும் மின்சார மாற்றைக் கொண்டிராத சிறப்பு உபகரணங்களுக்கும் புதுப்பிக்கத் தக்க டீசல் பயன்படுத்தப்படுகிறது.  - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூர் உணவகங்களிலிருந்து சேகரிக்கப்படும் பயன்படுத்தப்பட்ட சமையல் எண்ணெய் சில கனரக வாகனங்களுக்குச் சக்தியளிக்கிறது என்று சாங்கி விமான நிலையக் குழுமம் செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 19) தெரிவித்துள்ளது.

மே மாதம் தொடங்கிய சோதனையில், அதைப் பயன்படுத்தும் ஏழு வாகனங்களும் சிறப்பாகச் செயல்பட்டதாக அது கூறியது.

இந்த ஆறுமாத கால சோதனை, விமான நிலையத்தின் ஓடுதளப் பகுதியில் ஏற்கெனவே செயல்பாட்டில் உள்ள 60 வாகனங்களுக்கு தூய்மையான மாற்று எரிசக்திகளைக் கண்டறியும் முயற்சியின் ஒரு பகுதியாகும்.

நீடித்த நிலைத்தன்மைத் திட்டத்தின் ஓர் அங்கமாக, வழக்கமான டீசலுடன் ஒப்பிட, கரியமில வாயு வெளியேற்றத்தை 90 விழுக்காடு வரை குறைப்பதை இந்தச் சோதனை நோக்கமாகக் கொண்டுள்ளது.

2030 மற்றும் 2050ஆம் ஆண்டுகளில் நீடித்த நிலைத்தன்மையான எரிபொருள் பயன்பாடு, கரிம வெளியேற்றம் அறவே இல்லாமல் செய்வது ஆகிய இலக்குகளை அடையும் முயற்சிகளின் ஒரு பகுதியாக முந்தைய சோதனைகள் 2024ஆம் ஆண்டில் தொடங்கின.

கனரக வாகனங்களுக்கும் இன்னும் மின்சார மாற்றைக் கொண்டிராத சிறப்பு உபகரணங்களுக்கும் புதுப்பிக்கத் தக்க டீசல் பயன்படுத்தப்படுகிறது.

மின்சாரத்தில் செயல்படும் பளு தூக்கி (forklifts), டிராக்டர் போன்ற இலகுரக வாகனங்கள் எளிதாகக் கிடைக்கின்றன என்று சாங்கி விமான நிலையக் குழுமம் தெரிவித்துள்ளது.

ஆனால், விமான நிலைய ஓடுபாதையைத் துப்புரவு செய்யும் இயந்திரம் போன்ற விமானப் போக்குவரத்துத் துறையில் பயன்படுத்தப்படும் பெரும்பாலான கனரக வாகனங்கள் இன்னும் டீசலில் இயங்குபவையாகவே உள்ளன.

சாங்கி விமான நிலையம், உணவகங்களிலிருந்து சேகரிக்கப்படும் பயன்படுத்தப்பட்ட சமையல் எண்ணெய், சோதனையில் பயன்படுத்தப்படும் புதுப்பிக்கத் தக்க டீசலை உற்பத்தி செய்வதற்கு அல்லது மூலப்பொருளுக்குப் பங்களிக்கிறது என்று சாங்கி விமான நிலையக் குழுமம் கூறியது.

இந்த மூலப்பொருள் உயர்தர புதுப்பிக்கத் தக்க டீசல் எரிபொருளாக மாற்றப்படுகிறது. இது புதைபடிவ டீசலுக்கு ஒத்த ரசாயன கலவையைக் கொண்டுள்ளது என்று அது கூறியது.

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி நிறுவனமாக, துவாசில் அமைந்துள்ள ‘நெஸ்டி சிங்கப்பூர்’ எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் இது தயாரிக்கப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்