துடிப்புடன் நடமாடுவதற்கான உந்து நடமாட்டச் சாதனங்களை (ஏஎம்டி - AMD) விதிகளுக்கு முரணாகத் தயாரித்து விற்போரும் அவற்றைப் பயன்படுத்துவோரும் கடுமையான நடவடிக்கைகளை எதிர்நோக்கக்கூடும் என்று உள்துறை அமைச்சர் கா சண்முகம் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
அத்தகைய சாதனங்களால் அண்மையில் ஏற்பட்ட தீச்சம்பவங்கள் அதிகாரிகளின் கவனத்திற்கு வந்துள்ளதாகவும் விதிகளுக்குக் கட்டுப்படாதோருக்கு எதிரான கடுமையான நடவடிக்கைகள் குறித்து அவர்கள் பரிசீலித்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
“விதிகளுக்கு முரணான நடமாட்டச் சாதனங்களால் பொதுமக்களின் பாதுகாப்புக்கு ஆபத்து நேரலாம். அவற்றைத் தெரிந்தே விற்போரும் பயன்படுத்துவோரும் தங்களது குடும்பத்துக்கு மட்டுமல்லாமல் தங்களைச் சுற்றி உள்ளோரின் பாதுகாப்புக்கும் அபாயத்தை விளைவிக்கக்கூடியவர்களாக விளங்குகிறார்கள்,” என்றார் திரு சண்முகம்.
ஏஎம்டி சாதனங்களால் ஏற்படும் தீ விபத்துகள் குறித்து பீஷான்-தோ பாயோ குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் சாய் யின்சாவ் எழுப்பிய கேள்விகளுக்கு அமைச்சர் சண்முகம் திங்களன்று (செப்டம்பர் 22) எழுத்துவடிவில் பதிலளித்தார்.
“பொதுவாக, வீவக பேட்டைகளில் நிகழும் தீச்சம்பவங்கள் 2020ஆம் ஆண்டு முதல் 2024ஆம் ஆண்டு வரை குறைந்துள்ளன. 2020ஆம் ஆண்டு 939 சம்பவங்கள் நிகழ்ந்த நிலையில் கடந்த ஆண்டு அது 803ஆகச் சரிந்துவிட்டது. ஆயினும், உயிர்களையும் உடைமைகளையும் பறிக்கக்கூடிய தீ விபத்துகளில் பெரும்பாலானவற்றை நம்மால் தடுக்க இயலும்,” என்றார் அவர்.
கடந்த ஐந்து ஆண்டுகளில் ஏஎம்டி சாதனங்களால் 187 தீச்சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. அவற்றில் கிட்டத்தட்ட 46 விழுக்காட்டுச் சம்பவங்கள் பிஎம்டி எனப்படும் தனிநபர் நடமாட்டச் சாதனங்களால் ஏற்பட்டவை. இதர 42 விழுக்காட்டு தீச்சம்பவங்கள் மின்சாரம் இணைக்கப்பட்ட மிதிவண்டிகள் ஏற்படுத்தியவை. எஞ்சிய 12 விழுக்காட்டுச் சம்பவங்கள் தனிநபர் நடமாட்ட உதவிச் சாதனங்களால் ஏற்பட்டவை.
187 தீச்சம்பவங்களில் 98, அதாவது கிட்டத்தட்ட பாதியளவு சம்பவங்கள் நடமாட்டச் சாதனங்களுக்கு மின்னேற்றும்போது நிகழ்ந்தவை என்று திரு சண்முகம் தமது பதிலில் குறிப்பிட்டார்.
ஏஎம்டி தொடர்பான 22 தீச்சம்பவங்கள் கடந்த ஆண்டு வீவக வீடுகளில் நிகழ்ந்தன. 2023ஆம் ஆண்டு அது 20ஆகவும் அதற்கு முந்திய ஆண்டு 19ஆகவும் இருந்தன.
தொடர்புடைய செய்திகள்
வீடுகள் தவிர, வீவக பேட்டைகளில் அத்தகைய சம்பவங்களால் அதிக தீச் சம்பவங்கள் நிகழ்ந்தன. 2022ஆம் ஆண்டு 11; 2023ஆம் ஆண்டு 14; 2024ஆம் ஆண்டு 21 என அவை அதிகரித்தன.
அதுபற்றி திரு சண்முகம் கூறுகையில், “ஏஎம்டி சாதனங்கள் தொடர்பான தீச்சம்பவங்களால் உயிரிழப்புகளும் காயங்களும் அதிகமாக நிகழ்வதுபோலத் தெரிகிறது. குறிப்பாக, விதிகளுக்கு உட்படாத சாதனங்கள் பயன்படுத்தப்படுவது பற்றிய கவலை எழுந்துள்ளது.
“எனவே, பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடிய, விதிகளுக்கு முரணான நடமாட்டச் சாதனங்களைப் பயன்படுத்துவோருக்கும் அவற்றை விற்போருக்கும் எதிராகக் கடுமையான அமலாக்க நடவடிக்கைகள் எடுப்பது பற்றி பரிசீலித்து வருகிறோம்,” என்றார்.