கடந்த 2023ஆம் ஆண்டு வழங்கப்பட்ட தரவுகளின்படி, அரசாங்கத் தரவுத்தளங்களில் இருந்து தனிப்பட்ட தகவல்களைப் பெற்று மின்னிலக்கப் படிவங்களை நிரப்ப உதவும் சேவையான ‘மைஇன்ஃபோ’வை (MyInfo) பயன்படுத்தி அன்றாடம் 300,000க்கும் மேற்பட்ட பரிவர்த்தனைகள் செய்யப்படுகின்றன.
அரசாங்க நிறுவனங்கள், வணிகங்களால் வழங்கப்படும் குறைந்தது 1,000 மின்னிலக்கச் சேவைகள் மைஇன்ஃபோவுடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன.
அரசாங்க மின்னிலக்கச் சேவைகள் எவ்வாறு பயன்படுத்தப்படும் என்பதைக் காட்ட, நிறுவனங்கள் ‘பயனர் பயணம்’ (user journey) ஆவணத்தைச் சமர்ப்பிக்க வேண்டும் என்று கவ்டெக் (GovTech) கோருகிறது.
சிங்பாஸ் இணையத்தளத்தின்படி, தங்கள் இணையச் சேவைகளை சிங்பாஸ் உள்நுழைவு அம்சத்துடன் ஒருங்கிணைக்க விரும்பும் நிறுவனங்கள், ஒவ்வொரு சூழலின் அடிப்படையில் மதிப்பீடு செய்யப்படும்.
மேலும், நிறுவனங்கள் தங்கள் சேவைகளுக்காக மைஇன்ஃபோவிலிருந்து தேவையானதைவிட அதிகமான தனிப்பட்ட தரவுகளைக் கோர வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
“தனிப்பட்ட தரவுகளைச் சூழ்நிலைகளுக்கு ஏற்ற வகையில் சேகரிப்பதற்கான வழிகாட்டுதல்களை வழங்கும் தனிப்பட்ட தரவுப் பாதுகாப்புச் சட்டத்தின் (பிடிபிஏ) வழிகாட்டுதல்களுடன் இது ஒத்துப்போகிறது. ஒவ்வொரு கோரிக்கையும் ஒப்புதலுக்குமுன் மதிப்பாய்வு செய்யப்படும்,” என்று சிங்பாஸ் இணையத்தளம் குறிப்பிடுகிறது.
நிறுவனங்களிடமிருந்து வரும் கோரிக்கைகளை எவ்வாறு மதிப்பீடு செய்கிறது என்பதையும் தரவு அதிகமாகச் சேகரிக்கப்படுவதைத் தடுக்க என்ன முயற்சி மேற்கொள்ளப்படுகிறது என்பதையும் தெரிவிக்க கவ்டெக் மறுத்துவிட்டது.
சிங்கப்பூரில் தனிப்பட்ட தரவுகளைச் சேகரிப்பதையும் பயன்படுத்துவதையும் பிடிபிஏ நிர்வகிக்கிறது. தங்கள் தனிப்பட்ட தரவுகள் கையாளப்படும் விதம் குறித்து கவலைகொள்ளும் பயனர்கள் தனிப்பட்ட தரவுப் பாதுகாப்பு ஆணையத்தின் இணையத்தளம் வழியாகத் தங்கள் புகார்களைப் பதிவுசெய்யலாம்.
தொடர்புடைய செய்திகள்
மைஇன்ஃபோ வழியாகப் பகிரப்படும் தகவல்களின் வகையை பயனர்கள் இன்னமும் கவனமாக ஆராய வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகின்றனர்.