குற்றச் செயல்கள் மூலம் பெறப்பட்ட $1.5 பில்லியனைக் கொண்டு தங்கக்கட்டிகளை வாங்கிய ஆடவர்

1 mins read
02507657-3dae-41c6-9125-7882e4b47fd3
64 வயது கிம் டேக் ஹூன் 23,500க்கும் மேற்பட்ட தங்கக் கட்டிகளை தென்கொரியாவுக்கும் ஜப்பானுக்கும் அனுப்பியதாகத் தெரிவிக்கப்பட்டது. - படம்: பிக்சாபே

குற்றச்செயல்கள் மூலம் பெறப்பட்ட $1.5 பில்லியனுக்கும் அதிகமான தொகையைப் பயன்படுத்தி தென்கொரிய ஆடவர் ஒருவர் ஏறத்தாழ 28,000 தங்கக்கட்டிகளை வாங்கினார்.

2014ஆம் ஆண்டுக்கும் 2017ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் அவர் அப்பணத்தைப் பெற்றுக்கொண்டார்.

வெளிநாடுகளில் நிகழ்ந்த குற்றச் செயல்கள் மூலம் அத்தொகை பெறப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

ஆனால், அக்குற்றச் செயல்கள் தொடர்பான விவரங்களை நீதிமன்ற ஆவணங்கள் குறிப்பிடவில்லை.

64 வயது கிம் டேக் ஹூன் 23,500க்கும் மேற்பட்ட தங்கக்கட்டிகளை தென்கொரியாவுக்கும் ஜப்பானுக்கும் அனுப்பியதாகத் தெரிவிக்கப்பட்டது.

கருவிகளுக்குக் கீழ் தங்கக்கட்டிகள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

இந்தக் குற்றத்தைக் கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகளாக கிம் ரகசியமாகப் புரிந்துவந்ததாக அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் கூறினர்.

வர்த்தக ஏற்றுமதி, இறக்குமதி மையமான சிங்கப்பூரின் நிலையை அவர் தவறான முறையில் பயன்படுத்திக்கொண்டதாக அவர்கள் தெரிவித்தனர்.

இக்குற்றச்செயலில் ஈடுபட்டதற்காக கிம்முக்கு ஏறத்தாழ $1 மில்லியன் வெள்ளி கிடைத்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், வியாழக்கிழமை (செப்டம்பர் 4) கிம் குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

கள்ளப் பணத்தை நல்ல பணமாக்கிய குற்றத்தையும் அதிகாரிகளிடம் தெரிவிக்காமல் வெளிநாடுகளிலிருந்து $20,000க்கும் அதிகமான ரொக்கம் பெற்றுக்கொண்டதையும் அவர் ஒப்புக்கொண்டார்.

தீர்ப்பளிக்கப்படும்போது மேலும் 16 குற்றச்சாட்டுகள் கருத்தில் கொள்ளப்படும்.

2023ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 22ஆம் தேதியன்று கிம் சிங்கப்பூருக்கு வந்தார். ஆறு நாள்கள் கழித்து அவர் கைதுசெய்யப்பட்டார்.

இந்த வழக்கு தொடர்பாக அக்டோபர் 1ஆம் தேதியன்று தீர்ப்பளிக்கப்படும்.

குறிப்புச் சொற்கள்