கலைகள்வழி பண்பாட்டு உறவுகளை மேம்படுத்தும் முகாம்

1 mins read
5e69500a-af1a-4701-a1d0-59d52f4df0e6
முகாமில் பங்கேற்றுப் படம் வரைந்த கலைஞர்கள் (2022ஆம் ஆண்டுப் படம்). - படம்: ‘செஹர்’ அமைப்பு

ஆசியான் நாடுகளைச் சேர்ந்த 21 கலைஞர்களை இணைக்கும் ஆசியான் - இந்தியா கலைஞர்கள் முகாம் மார்ச் 29 ஆம் தேதி முதல் ஏப்ரல் 7ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

கலைகள் வழியாகப் பண்பாட்டு வட்டார உறவுகளை மேம்படுத்தும் நோக்கில் இம்முகாம் நடத்தப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டது.

21ஆவது ஆசியான் இந்தியா உச்சநிலை மாநாட்டில் எடுக்கப்பட்ட பண்பாடு தொடர்பான உத்திப்பூர்வ பங்காளித்துவக் கொள்கை முடிவுக்கும், தனது கிழக்கு நோக்கிய கொள்கைக்கும் ஏற்ப இந்திய வெளியுறவு அமைச்சு இம்முகாமிற்கு ஏற்பாடு செய்துள்ளது.

இந்தியாவின் ‘செஹர்’ அமைப்பு அமைச்சுடன் இணைந்து கடந்த மூவாண்டுகளாக நடத்தி வரும் இம்முகாம், இந்திய கிழக்காசிய நாடுகளுக்கு இடையிலான பண்பாட்டுப் பரிமாற்றத்திற்கு முக்கியத் தளமாக விளங்குகிறது.

இதில் பல்வேறு வட்டாரங்களைச் சேர்ந்த கலைஞர்கள் தங்களின் தனித்துவமான உத்திகள், அனுபவங்கள், கண்ணோட்டங்களைப் பகிர்ந்துகொள்வர்; பாரம்பரிய நடனம், இசை, கைவினைக் கலைகள் பயிலரங்குகளிலும் பங்கேற்பர்.

இந்தியாவின் மேகாலயா மாநிலத் தலைநகர் ஷில்லாங்கில் நடைபெறவுள்ள இம்முகாமில் உள்ளூர் மாணவர்களுடன் அவர்கள் தங்கள் அனுபவங்களைப் பகிரும் அமர்வுக்கும் ஏற்பாடு செய்யப்படவுள்ளது.

இதில் சிங்கப்பூர், தாய்லாந்து, மலேசியா, கம்போடியா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த கலைஞர்கள் பங்கேற்கின்றனர். சமகால, நவீன, பாரம்பரிய வடிவங்களில் தங்களின் தனித்துவமான கலைப் படைப்புகளையும் கலைஞர்கள் இம்முகாமில் படைக்கவுள்ளனர்.

முகாமில் படைக்கப்படும் கலைப்படைப்புகள் புதுடெல்லியில் நடக்கும் இரண்டு நாள் கண்காட்சியில் அறிமுகம் செய்யப்பட்டு, பின்னர் ஒரு வார கண்காட்சிக்காக மலேசியாவிற்கு எடுத்துச்செல்லப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்