வெளிநாடுகளுக்குச் சென்று திரும்பும் சிங்கப்பூரர்களும் நிரந்தரவாசிகளும் அங்கு போதைகலந்த ‘கேபோட்’ மின்சிகரெட்டுகளைப் பயன்படுத்தியிருந்தால் அவர்கள்மீது சிங்கப்பூரில் நடவடிக்கை எடுக்கப்படும்.
எல்லைகடந்த போதைப்பொருள் ஒழிப்புச் சட்டத்தின்படி, வெளிநாடுகளில் போதைப்பொருள் குற்றங்களைப் புரிவோர் சிங்கப்பூரில் குற்றம் புரிந்ததாகக் கருதப்படுவர்.
செப்டம்பர் 1ஆம் தேதி முதல் ‘சி’ பிரிவு போதைப்பொருளாக வகைப்படுத்தப்பட்டுள்ள எட்டோமிடேட்டுக்கும் இந்தச் சட்டம் பொருந்தும் என்று உள்துறை மூத்த துணை அமைச்சரான இணைப் பேராசிரியர் முஹம்மது ஃபைஷால் இப்ராஹிம் நாடாளுமன்றத்தில் நேற்று (செப்டம்பர் 22) தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இதைப் பற்றிய விவாதம் முற்பகல் 11.45 மணிக்குத் தொடங்கி நண்பகல் 12.30 வரை நீடித்தது.
எட்டோமிடேட் போதைப்பொருளை முதல்முறையாகப் பயன்படுத்தும் 18 வயதுக்கு மேற்பட்ட குற்றவாளிகளுக்கு $700 அபராதமும், 18 வயதுக்குட்பட்டோருக்கு $500 அபராதமும் விதிக்கப்படும். மேலும் அவர்கள் ஆறுமாத மறுவாழ்வுப் பயிற்சிகளுக்கும் செல்லவேண்டும்.
இரண்டாம் முறை பிடிபடுவோர் போதைப் புழக்கப் பரிசோதனையும் மறுவாழ்வுப் பயிற்சியும் உள்ளடங்கிய ஆறுமாதக் கட்டாய மேற்பார்வைக்கு ஆட்பட வேண்டும். கேபோட் போதைப்பொருளை மூன்றாவது முறை பயன்படுத்தியோர், 16 வயதுக்கு மேற்பட்டிருந்தால் போதை மறுவாழ்வு நிலையத்தில் 12 மாதங்கள் தங்கியிருக்க வேண்டும். அப்போது அவர்கள் போதைப் புழக்கப் பரிசோதனைக்கும் மேற்பார்வைக்கும் ஆட்பட வேண்டும்.
16 வயதுக்குட்பட்டோர், கட்டாய மேற்பார்வையில் ஓராண்டுகால போதைப் புழக்கச் சோதனைக்கு ஆட்படுத்தப்படுவர்.
கடந்த ஆண்டு செப்டம்பர் 15 முதல் இவ்வாண்டு செப்டம்பர் 14ஆம் தேதி வரை, குடிநுழைவு, சோதனைச்சாவடிகள் ஆணையம் அதன் இரு நிலச் சோதனைச்சாவடிகளில் மிகப் பெரிய 76 மின்சிகரெட் கடத்தல் முயற்சிகளைத் தடுத்துள்ளது. மேலும் அஞ்சல்வழி மேற்கொள்ளப்பட்ட 57 மின்சிகரெட் கடத்தல் முயற்சிகளை ஆணையம் முறியடித்துள்ளது எனவும் அமைச்சர் ஃபைஷால் குறிப்பிட்டார்.
இந்தச் சம்பவங்களில் 500,000க்கும் மேற்பட்ட கருவிகள் கைப்பற்றப்பட்டன என்றும் அவர் கூறினார். துவாஸ் சோதனைச் சாவடியில் செப்டம்பர் 15ஆம் தேதி 18,400 மின்சிகரெட்டுகளும் 1,400 கருவிகளும் ஒரு லாரியிலிருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.