கம்போடியாவுக்குப் பள்ளிச் சுற்றுலா சென்றிருந்த 17 வயது வெளிநாட்டு மாணவர் ஒருவரின் மரணம் சில பெற்றோர் இடையே அக்கறையை எழுப்பியுள்ளது.
வெளிநாட்டுப் பயணங்கள் தொடர்பான வழிகாட்டி நெறிமுறைகள் மறுஆய்வு செய்யப்படவேண்டும் என்று கூறிய அவர்கள், தாங்கள் பதில்களை எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தனர்.
இந்தியாவைச் சேர்ந்த கைரா கர்மாக்கர், டோவர் ரோட்டில் அமைந்துள்ள யுனைடெட் வோர்ல்டு கல்லூரியில் பயின்றுவந்தார். பள்ளிச் சுற்றுலா மேற்கொண்டு கம்போடியத் தலைநகர் நோம் பென்னுக்குச் சென்றபோது ஜூன் முதல் தேதி நடந்த சாலை விபத்து ஒன்றில் அவர் மாண்டார்.
அவர் சக மாணவர்களுடன் இருந்தார் என்றும் ஆசிரியர்களோ பெரியவர்களோ அவர்களுடன் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.
அதே நாளன்று காலை மணி 3.07க்குக் கல்லூரிக்கு அது குறித்து தகவல் கிடைத்தது.
அந்தக் குழுவில் எத்தனை மாணவர்கள் இருந்தார்கள் என்பதைத் தெரிவிக்க கல்லூரி மறுத்துவிட்டது.
முன்னணி அனைத்துலகப் பள்ளியான யுனைடெட் வோர்ல்டு கல்லூரி சிங்கப்பூரில் இரண்டு வளாகங்களைக் கொண்டுள்ளது. ஒன்று டோவர் ரோட்டிலும் மற்றொன்று தெம்பனிசிலும் அமைந்துள்ளன.
சம்பவம் குறித்து பள்ளி வெளிப்புற விசாரணையை நடத்தத் திட்டமிடுவதாக யுனைடெட் வோர்ல்டு கல்லூரித் தலைவர் நிக் அல்சின் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
பள்ளிச் செயல்முறைகளை மறுஆய்வு செய்யும் பள்ளி ஆளுநர்கள் நிர்வாகக் குழுவின் தணிக்கை குழுவிடம் இறுதி அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என்றார் அவர்.