உஸ்பெகிஸ்தானுக்கு நேரடி விமானச் சேவை: சாங்கி விமானக் குழுமம் ஆலோசனை

1 mins read
7887cf10-f027-46b3-92ea-dbebbf47dcfd
உஸ்பெகிஸ்தான் விமான நிலையமும் சாங்கி விமான நிலையக் குழுமமும் நேரடி விமானச் சேவைகளை மீண்டும் தொடங்குவது பற்றி ஆலோசிக்கின்றன. - கோப்புப் படம்

சிங்கப்பூர் விமான நிலைய அதிகாரிகள் உஸ்பெகிஸ்தானுக்கு நேரடி விமானச் சேவையை மீண்டும் தொடங்குவது பற்றி பரிசீலிக்கின்றனர். உஸ்பெகிஸ்தானுக்கான பயணத் தேவைகள் அதிகரித்துள்ளன.

உஸ்பெகிஸ்தானுக்கு விமானச் சேவையைத் தொடங்குவது பற்றிய கலந்துரையாடல் தொடக்கக் கட்டத்தில் உள்ளன என்றும் கூடுதல் விவரங்கள் தயாரானவுடன் வழங்கப்படும் என்றும் சாங்கி விமான நிலையக் குழுமப் பேச்சாளர் கூறினார்.

உஸ்பெகிஸ்தானுக்குப் பலர் பயணம் செய்ய விரும்புவதாகவும் மத்திய ஆசியா வளர்ச்சியடைந்து வரும் வட்டாரமாக இருப்பதால் நேரடி விமானச் சேவைக்கு ஏற்பாடு செய்வதில் சாங்கி விமான நிலையக் குழுமம் கவனம் செலுத்துவதாகப் பேச்சாளர் சொன்னார்.

சிங்கப்பூருக்கும் தனக்கும் இடையிலான நேரடி விமான வழித்தடத்தைத் திறப்பது பற்றி சாங்கி விமான நிலையக் குழுமத்துடன் பேசி வருவதாக உஸ்பெகிஸ்தான் விமான நிலையங்கள் அமைப்பு மே 20ஆம் தேதி தெரிவித்திருந்தது.

விமானச் சேவையைத் தொடங்க தேவைப்படும் தளவாடங்கள், விளம்பரம், செயல்பாட்டு நடைமுறை ஆகியவை தொடர்பில் சாங்கி விமான நிலைய குழுமத்துடன் இணைந்து செயல்பட உஸ்பெகிஸ்தான் விமான நிலையங்கள் அமைப்பு இணங்கியுள்ளது.

உஸ்பெகிஸ்தான் ஏர்வேஸ் நிறுவனம் இதற்குமுன் வாரத்துக்கு இரண்டு முறை டா‌ஷ்கென்ட், சிங்கப்பூர், கோலாலம்பூர் வழியாகச் சேவை வழங்கியது.

2019 ஏப்ரல் மாதம் சாங்கி விமான நிலையத்திலிருந்து போக்குவரத்து குறைந்ததால் சிங்கப்பூர்ப் பயணங்கள் கைவிடப்பட்டன.

குறிப்புச் சொற்கள்