ஆண்டிறுதிப் பயணங்களுக்குத் தயாராகும் வேளையில், வெளிநாடுகளுக்குப் பயணம் மேற்கொள்வதற்கு முன், தேவையான தடுப்பூசிகளைப் போட்டுக்கொள்ளுமாறும் மருந்துகளை எடுத்துக்கொள்ளுமாறும் தொற்றுநோய்த் தடுப்பு அமைப்பு அறிவுறுத்தியுள்ளது.
மலேரியா, டைஃபாய்டு போன்ற நோய்களைத் தடுக்கும் நோக்கில் அந்த அமைப்பு கடந்த மாதம் (நவம்பர் 2025) அதிகாரபூர்வமாக அறிமுகம் கண்டது.
பயணம் மேற்கொள்வதற்கு நான்கு முதல் ஆறு வாரத்திற்கு முன்னர், பயணச் சுகாதார மருந்தகத்திற்குச் சென்று, பயணக்காலத்தில் உடல்நலத்துடன் இருப்பதற்கு ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளுமாறும் அமைப்பு பரிந்துரைத்தது.
சில நாடுகள் அருகிலுள்ளவை என்பதாலும் பயணக்காலப் பரபரப்புக்கு இடையிலும் தடுப்பூசிகளைப் போட்டுக்கொள்ளச் சிலர் மறந்துவிடுவதாக அமைப்பின் தொற்றுநோய்த் திட்டக்குழு இயக்குநர் லிம் போ லியான் கூறினார்.
கடந்த ஆண்டு ஐந்து சிங்கப்பூர்வாசிகள் மலேரியாவாலும் 14 பேர் ‘டைஃபாய்டு’ நோயினாலும் பாதிக்கப்பட்டதையும் அமைப்பு சுட்டியது.
மலேரியா நோய், வெளிநாட்டுப் பயணங்களுடன் தொடர்புடையது எனக் கண்டறியப்பட்டது. ‘
டைஃபாய்டுக்கும்’ அவை காரணமாக இருக்கக்கூடும் என்று சுகாதார அமைச்சின் ஆணைபெற்ற கழகம் தெரிவித்தது.
பயணங்கள், கூட்டம் ஆகியவை சுவாசம் தொடர்பான நோய்த்தொற்றுகளை ஏற்படுத்தக்கூடும் என்று இணைப் பேராசிரியர் லியான் தெரிவித்தார்.
தொடர்புடைய செய்திகள்
பயணத்தின்போது நோய் தொற்றும் சாத்தியத்தைத் தவிர்க்க உரிய மருந்துகளைக் கையுடன் எடுத்துச்செல்லுமாறு அமைப்பு பரிந்துரைத்துள்ளது.
மேலும், பயணப் பாதுகாப்பு நடைமுறைகள், உலகில் பல்வேறு பகுதிகளுக்குச் செல்லும்போது கடைப்பிடிக்கவேண்டிய அம்சங்கள் உள்ளிட்ட விரிவான தகவல்களையும் அமைப்பு அதன் இணையப்பக்கத்தில் பதிவிட்டு வருகிறது.
மேல் விவரங்களுக்குக் காண்க https://www.cda.gov.sg/public/health-and-safety-abroad/ என்ற இணையப்பக்கத்தைப் பார்க்க.

