தனது நிதியமைப்பின் நம்பகத்தன்மையைக் காக்கும் வலுவான பாதுகாப்பு ஏற்பாடுகளைத் தொடர்வதோடு, புதிய செல்வத்தை உருவாக்கவும் அனைத்துலக நிதி மையமாகத் தனது நிலையை வலுப்படுத்தவும் சிங்கப்பூர் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்த வேண்டும் என்று தேசிய வளர்ச்சி துணை அமைச்சர் ஆல்வின் டான் தெரிவித்துள்ளார்.
செவ்வாய்க்கிழமை (நவம்பர் 17) நடந்த முதலாவது எச்எஸ்பிசி சொத்து உச்சநிலை மாநாட்டில் கலந்துகொண்டு அவர் உரையாற்றினார்.
அதிநவீன செயற்கை நுண்ணறிவு மாதிரிகளை உருவாக்குவதில் உலகத் தொழில்நுட்பப் பெருநிறுவனங்களுடன் போட்டியிடுவதற்குப் பதிலாக, நிதிச் சேவைகள் உள்ளிட்ட துறைகளில் ஆய்வு, மேம்பாடு, பயன்பாட்டு மையமாகச் சிங்கப்பூர் தன்னை நிலைநிறுத்தி வருவதாகத் திரு டான் கூறினார்.
நம்பிக்கையின் அடிப்படையில் வளர்ந்துள்ள சிங்கப்பூரின் சொத்து நிர்வாகத் துறையால் நிர்வகிக்கப்படும் சொத்துகளின் மதிப்பு $7 டிரில்லியனை எட்டியிருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
கடந்த ஐந்தாண்டுகளில் தனியார் வங்கி வாடிக்கையாளர்களின் சொத்துகள் கிட்டத்தட்ட 50 விழுக்காடு கூடியுள்ளன. தற்போது சிங்கப்பூரில் ஏறக்குறைய 2,000 தனிக்குடும்ப அலுவலகங்கள் உள்ளன.
நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் நிதித்துறை ஏறத்தாழ 14 விழுக்காடு பங்களிப்பதுடன் கிட்டத்தட்ட 200,000 பேருக்கு வேலைவாய்ப்பும் அளிக்கிறது என்று சிங்கப்பூர் நாணய ஆணைய வாரிய உறுப்பினருமான திரு டான் தெரிவித்தார்.
சிங்கப்பூரைச் செல்வ மையமாக மேம்படுத்துவதில், நம்பிக்கைமூலம் செல்வத்தைப் பெருக்குவது, புத்தாக்கத்தால் செல்வத்தை உருவாக்குவது, அறக்கொடை, வாரிசுரிமைமூலம் செல்வத்தை வழங்குவது ஆகியவற்றிற்கு முன்னுரிமை அளிக்கப்படுவதாக அவர் பட்டியலிட்டார்.
இணைப்பு, நவீன உற்பத்திமுறைகள், சுகாதாரம், தேசிய வளர்ச்சி வீடமைப்புத் திட்டங்கள், நிதிச் சேவைகள் ஆகிய ஐந்து துறைகளில் செயற்கை நுண்ணறிவு வாயிலாகப் பொருளியல் வாய்ப்புகளை உருவாக்கலாம் என்றார் அவர்.
ஏறக்குறைய 30 நிதி அமைப்புகள் இங்கு செயற்கை நுண்ணறிவு உன்னத நிலையங்களை அமைத்துள்ளன.
பங்குச் சந்தையை வலுப்படுத்துவதுடன், கள்ளப்பணத் தடுப்பு விதிகளையும் முறையான நிதி வரத்தையும் சிங்கப்பூர் சமநிலைப்படுத்த வேண்டும் என்று திரு டான் வலியுறுத்தினார்.
மேலும், அறக்கொடைத் திட்டங்கள்மூலம் சமூக ஒற்றுமையையும் எதிர்காலத் தலைமுறைக்கான நலன்களையும் கட்டமைக்க சிங்கப்பூர் இலக்கு கொண்டுள்ளதாகவும் அவர் சொன்னார்.
