மின்னிலக்கத் தங்க விநியோகத் தொடரில் ஆழக் கால்பதிக்கும் ‘வேல்யூமேக்ஸ்’

மின்னிலக்கத் தங்க விநியோகத் தொடரில் ஆழக் கால்பதிக்கும் ‘வேல்யூமேக்ஸ்’

2 mins read
dd791443-268f-49c3-9bbd-5516e2fb084f
‘வேல்யூமேக்ஸ்’ நிறுவனம், அதன் பல்லாண்டுகால அனுபவம், உள்ளூர்ச் சந்தை நிபுணத்துவத்தின் அடிப்படையில் சிறப்பாகச் செயல்பட முடியும் என்று நிறுவனத்தின் வர்த்தகம், சில்லறை விற்பனைப் பிரிவின் நிர்வாக இயக்குநர் இயா லீ சிங் கூறினார். - படம்: பிஸ்னஸ் டைம்ஸ்

சிங்கப்பூரின் விலையுயர்ந்த உலோகச் சந்தையில் போட்டி அதிகரித்துவரும் வேளையில், அடகுத் தொழில் நிறுவனமான ‘வேல்யூமேக்ஸ்’, நகைகள் மறுபயனீடு முதல் மின்னிலக்கத் தங்க வர்த்தகம் வரை ஒட்டுமொத்தத் தங்க விநியோகத் தொடரிலும் தனது இருப்பை வலுப்படுத்தத் திட்டமிட்டுள்ளது.

பல்லாண்டுகளாக, பாரம்பரிய அடகுத் தொழிலுக்கு அப்பால், சில்லறை விற்பனை, தங்கம், நகை வர்த்தகம், கடன் வழங்குதல் எனப் பன்முனைப் பிரிவுகளில் இந்நிறுவனம் வருவாய் ஈட்டி வருகிறது.

வாடிக்கையாளர் விருப்பங்களுக்கு ஏற்ப அது தன் செயல்பாடுகளை மாற்றி அமைத்துக்கொள்கிறது என்று ‘வேல்யூமேக்ஸ்’ நிறுவனத்தின் வர்த்தகம், சில்லறை விற்பனைப் பிரிவின் நிர்வாக இயக்குநர் இயா லீ சிங், பிஸ்னஸ் டைம்ஸ் ஊடகத்திடம் கூறினார்.

தங்கம் போன்ற விலையுயர்ந்த உலோக வர்த்தகத்துக்கும் (bullion trading) மின்னிலக்கத் தங்கத்துக்கும் இடையிலான ஒப்பீட்டைச் சுட்டிய அவர், மனிதர்களின் தனிப்பட்ட விருப்பங்களும் நடைமுறைகளும் மாறுபடுவது இயல்பானதும் ஏற்றுக்கொள்ளக்கூடியதுமாகும் என்று குறிப்பிட்டார்.

“சிலருக்குப் பொருள்களைத் தொட்டுணரப் பிடிக்கும். மற்றவர்க்கோ மின்னிலக்கத் தங்கம் ஏற்புடையதாக இருக்கும்,” என்றார் அவர்.

ஆரோக்கியமான போட்டி

மின்னிலக்க அமைப்புகளில் கணிசமாக முதலீடு செய்துள்ள ‘வேல்யூமேக்ஸ்’, ஆரோக்கியமான போட்டி தொழில்துறையை மேலும் மேம்படுத்தும் என்று நம்புகிறது. சிங்கப்பூர் தங்கம் வாங்குவதற்கான நடுவமாகப் பார்க்கப்படும் என்று கூறிய திருவாட்டி இயா, வட்டாரம் முழுவதிலுமிருந்து வாடிக்கையாளர்களை இதன் மூலம் ஈர்க்க முடியும் என்றார்.

‘வேல்யூமேக்ஸ்’ நிறுவனம், அதன் பல்லாண்டுகால அனுபவம், உள்ளூர்ச் சந்தை நிபுணத்துவத்தின் அடிப்படையில் சிறப்பாகச் செயல்பட முடியும் என்று திருவாட்டி இயா நம்பிக்கை தெரிவித்தார்.

2025 டிசம்பர் 31ஆம் தேதியுடன் முடிந்த ஆறு மாதங்களில், இந்நிறுவனத்தின் நிகர லாபம் 14 விழுக்காடு அதிகரித்து 54.1 மில்லியன் வெள்ளியாக உயர்ந்தது. இதில், நகைகள், தங்கத்தின் சில்லறை விற்பனை மற்றும் வர்த்தகம் 77.3 விழுக்காட்டிற்குப் பங்களித்துள்ளது.

அனைத்துவகைச் செய்திகளும் ஒரே இடத்தில்.

சிங்கப்பூரில் முதலீட்டுத் தங்கத்திற்கான தேவை அதிகரித்து வருவதால், வாடிக்கையாளர்களை நேரடியாக ஈர்க்கும் தங்க விற்பனையாளராக உருவெடுக்க 'வேல்யூமேக்ஸ்’ நிறுவனம் இலக்கு கொண்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்