வேனை நிறுத்த மறுத்த ஓட்டுநர்; துரத்திப் பிடித்த காவல்துறை

1 mins read
bd330793-f37d-4936-a399-311c47d43057
வேன் கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரம் இருந்த தடத்தில் மோதி நின்றது. - படம்: எஸ்ஜி ரோட் விஜிலான்டே

சுவா சூ காங் வட்டாரத்தில் ஜனவரி 1ஆம் தேதி போக்குவரத்துக் காவல்துறை அதிகாரிகள் வழக்கமான சோதனை மேற்கொண்டனர்.

அப்போது, மாலை 5.20 மணிக்குச் சுவா சூ காங் அவென்யூ 7 மற்றும் கியட் ஹோங் லிங் சாலை சந்திப்பில் அதிகாரிகளின் உத்தரவை மீறி வேனில் இருந்த ஓட்டுநர் வாகனத்தை வேகமாக வேறு திசையிலும் ஆபத்தான முறையிலும் செலுத்தினார்.

அதன்பின்னர் வேனை அதிகாரிகள் துரத்திச் சென்றனர். ஒரு கட்டத்தில் வேன் கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரம் இருந்த தடத்தில் மோதி நின்றது.

இந்தச் சம்பவத்தில் போக்குவரத்து காவல்துறை அதிகாரி ஒருவருக்குக் காயம் ஏற்பட்டது. அவரும் வேனில் இருந்த சந்தேக நபரும் இங் தெங் ஃபோங் பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இருவரும் சுயநினைவுடன் இருந்தனர்.

வேனில் ஆயுதங்களும் போதைப்பொருள் தொடர்பான பொருள்களும் இருந்தன.

34 வயது சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் வாகனம் ஓட்டுவதற்கான உரிமம் இல்லை. வாகனத்திற்கான காப்புறுதியும் இல்லை. காவல்துறையின் விசாரணை தொடர்கிறது.

சம்பவம் தொடர்பான காணொளி சமூக ஊடகத்தில் பரவி வருகிறது. அதில் வேனை சந்தேக நபர் ஆபத்தான முறையில் ஓட்டுவதைக் காண முடிந்தது.

குறிப்புச் சொற்கள்