மின்சிகரெட் தொடர்பான குற்றங்களுக்காக, செப்டம்பர் 1ஆம் தேதிக்கும் அக்டோபர் 12ஆம் தேதிக்கும் இடைப்பட்ட காலத்தில் மொத்தம் 1,339 பேர் பிடிபட்டுள்ளனர். அவர்களில் 67 பேர் மறுவாழ்வுத் திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
அவர்களில் இருவர் மனநலக் கழகம், சுகாதார மேம்பாட்டு வாரியம் அல்லது சமூகச் சேவை அமைப்புகள் ஆகியவற்றில் முன்பதிவு செய்யப்பட்ட நேரடிச் சந்திப்புக்குச் செல்லவில்லை. சுகாதார அமைச்சும் சுகாதார அறிவியல் ஆணையமும் வியாழக்கிழமை (அக்டோபர் 16) வெளியிட்ட கூட்டறிக்கையில் அந்த விவரங்கள் இடம்பெற்றுள்ளன.
சம்பந்தப்பட்ட இருவரையும் ஆணையம் விசாரித்து வருகிறது. முன்பதிவுச் சந்திப்பிற்குப் போகாமல் இருந்ததற்காக அவர்கள் மீது வழக்குத் தொடுக்கப்படக்கூடும்.
பிடிபட்ட 1,339 பேரில் 102 பேரிடம் எட்டோமிடேட் கலந்த மின்சிகரெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன. இம்மாதம் (அக்டோபர் 2025) 3ஆம் தேதிக்கும் 5ஆம் தேதிக்கும் இடையில் நடைபெற்ற எஃப்ஒன் இரவு நேர கார்ப் பந்தயத்தின்போது 32 வெளிநாட்டவரும் நிரந்தரவாசிகள் ஐவரும் மின்சிகரெட் வைத்திருந்ததற்காகச் சிக்கினர். சென்ற ஆண்டுடன் (2024) ஒப்பிடுகையில் அது ஐந்து மடங்கு குறைவு. இம்முறை பந்தயத்தின்போது பிடிபட்ட அனைவருக்குமே அதே இடத்தில் அபராதம் விதிக்கப்பட்டதாக அமைச்சும் ஆணையமும் தெரிவித்தன.
மின்சிகரெட் தொடர்பான குற்றங்களுக்காகக் கடந்த ஆறு வாரத்தில் எட்டுப் பேர் மீது நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டது. அவர்களில் ஒருவருக்கு வயது 17. எட்டோமிடேட் கலந்த மின்சிகரெட்டுகளைக் கடத்திய சந்தேகத்தில் அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டது.