2024 டிசம்பர் 28 முதல் உயரும் பொதுப் போக்குவரத்துக் கட்டண உயர்வைச் சமாளிக்க அரசாங்கம் பல்வேறு உதவிகளை வழங்க உள்ளது.
மாதம் $1,800 வரை வருமானம் ஈட்டுவோர் உள்ள குடும்பம் ஒவ்வொன்றுக்கும் $60 பொதுப் போக்குவரத்துப் பற்றுச்சீட்டை அரசாங்கம் வழங்கும்.
போக்குவரத்து அமைச்சும் மக்கள் கழகமும் இதனை அறிவித்துள்ளன.
கடந்த ஆண்டு, மாத வருமானம் $1,600 வரை ஈட்டக்கூடியோர் உள்ள குடும்பம் ஒவ்வொன்றுக்கும் $50 பொதுப் போக்குவரத்துப் பற்றுச்சீட்டு வழங்கப்பட்டது. இவ்வாண்டு $10 கூடுதலாக வழங்கப்பட உள்ளது.
வருமான வரும்பு உயர்த்தப்படுவதால் இவ்வாண்டு கூடுதலாக 60,000 குடும்பங்கள் பலனடையும்.
2023ஆம் ஆண்டு பற்றுச்சீட்டைப் பெற்றவர்களும் தொடர்ந்து அதற்குத் தகுதி பெறுவோரும் இவ்வாண்டுக்கான பற்றுச்சீட்டைப் பெறுவர். டிசம்பர் இறுதிவாக்கில் அவர்களுக்கு அதுகுறித்த அறிவிப்பு அனுப்பப்படும்.
மாணவர்களுக்கு சலுகைக் கட்டணம் நீட்டிப்பு
பட்டம் பெற இருக்கும் மாணவர்கள் படிப்பு முடிந்த பின்னர் மேலும் 4 மாதங்களுக்கு பொதுப் போக்குவரத்து சலுகைக் கட்டணத்தில் பயணம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
பொதுப் போக்குவரத்துக் கட்டண உயர்வு நடப்புக்கு வரும் டிசம்பர் 28ஆம் தேதி முதல் இந்தச் சலுகை நீட்டிப்பை அவர்கள் பெறலாம்.
தொடர்புடைய செய்திகள்
இதன் மூலம், உயர்நிலைப் பள்ளிகள், தொடக்கக் கல்லூரிகள், தொழில்நுட்பக் கல்விக் கழகம் மற்றும் பலதுறைத் தொழிற்கல்லூரிகளைச் சேர்ந்த ஏறத்தாழ 75,000 மாணவர்கள் ஒவ்வோர் ஆண்டும் பலனடைவர் என்று பொதுப் போக்குவரத்து மன்றம் தெரிவித்தது.
உயர்நிலைப் பள்ளியிலிருந்து தொழில்நுட்பக் கல்விக் கழகம் அல்லது பலதுறைத் தொழிற்கல்லூரிகளில் சேர்வது போன்ற கல்வியின் அடுத்தடுத்த கட்டங்களுக்கு இடம்பெயரும் மாணவர்களுக்கும் அவர்களின் குடும்பங்களுக்கும் இந்த நடவடிக்கை உதவும் என்றும் அது குறிப்பிட்டது.
டிசம்பர் 28ஆம் தேதியிலோ அதற்குப் பின்னரோ சலுகைக் கட்டணத் தகுதி முடிவுக்கு வரும் நிலையில் உள்ள மாணவர்களுக்கு இந்த நான்கு மாதச் சலுகை நீட்டிப்பு வழங்கப்படுகிறது.
உயர்நிலைப் பள்ளியிலிருந்து தொடக்கக் கல்லூரி, பலதுறைத் தொழிற்கல்லூரி அல்லது தொழில்நுட்பக் கல்விக் கழகத்திற்கு மாறிச் செல்லும் மாணவர்கள், பெரியோருக்கான பயணக் கட்டணத்தைச் செலுத்த வேண்டும் என்பது தற்போதைய நிலை.