சிங்கப்பூரில் உள்ள பல்வேறு முன்னணி உணவங்காடி நிலையங்கள் பழுதுபார்ப்பு மற்றும் மேம்பாட்டுப் பணிகளுக்காக அதிகபட்சம் மூன்று மாத காலத்திற்கு மூடப்பட உள்ளன.
அவற்றுள் மிகவும் பிரபலமான ஹேக் ரோடு மற்றும் பெர்சே உணவங்காடி நிலையங்களும் அடங்கும்.
அதுகுறித்த அறிவிப்பு தேசியச் சுற்றுப்புற வாரியத்தின் இணையத்தளத்தில் காணப்பட்டது.
அதன்படி, தோ பாயோ, அங் மோ கியோ, பூன் லே பிளேஸ் மற்றும் ஹேக் ரோடு உணவங்காடி நிலையங்கள் வரும் திங்கட்கிழமை (செப்டம்பர் 22) முதல் மூடப்பட உள்ளன.
புளோக் 219 தோ பாயோ லோரோங் 8ல் இயங்கும் ஈரச்சந்தை மற்றும் உணவங்காடி நிலையம் செப்டம்பர் 22ஆம் தேதி மூடப்பட்டு, இரண்டு மாதத்திற்குப் பின் நவம்பர் 24ஆம் தேதி புதுப்பொலிவுடன் திறக்கப்படும்.
அங் மோ கியோ அவென்யூ 4, புளோக் 628ல் உள்ள ஈரச்சந்தை மற்றும் உணவங்காடி நிலையம் திங்கட்கிழமை மூடப்பட்டு, டிசம்பர் 15ஆம் தேதி மீண்டும் திறக்கப்படும்.
பூன் பிளேஸ் புளோக் 221 ஏ/பி முகவரியில் உள்ள பூன் லே பிளேஸ் சந்தை மற்றும் உணவங்காடி நிலையம் டிசம்பர் 21ஆம் தேதியும் புளோக் 13/14 ஹேக் ரோடு சந்தை மற்றும் உணவங்காடி நிலையம் டிசம்பர் 22ஆம் தேதியும் மீண்டும் திறக்கப்படும்.
166 ஜாலான் புசார் முகவரியில் இயங்கும் பெர்சே உணவங்காடி நிலையம் செப்டம்பர் 29ஆம் தேதி மூடப்பட்டு டிசம்பர் 28ஆம் தேதி புதுப்பொலிவுடன் மீண்டும் திறக்கப்படும்.
தொடர்புடைய செய்திகள்
மற்றோர் உணவங்காடி நிலையமான புளோக் 79 மற்றும் 79ஏ, சர்க்கிட் ரோடு முகவரியில் உள்ள உணவங்காடி நிலையம் அக்டோபர் 1 முதல் டிசம்பர் 30 வரை மூடப்பட்டு இருக்கும்.
உணவங்காடி நிலையங்கள் சிங்கப்பூரின் அன்றாட வாழ்வில் இன்றியமையாதவை என்று தேசியச் சுற்றுப்புற வாரியம் குறிப்பிட்டு உள்ளது.
நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சுக்குச் சொந்தமான உணவங்காடி நிலையங்கள் சுத்தமாக இருப்பதை உறுதிசெய்யும் பொருட்டு, முறையான பழுதுபார்ப்பு மற்றும் மேம்பாட்டுப் பணிகளோடு தூய்மைப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக வாரியம் தெரிவித்துள்ளது.

