கைதிகளின் சுகாதார நிலை: சிறைச்சாலைகளால் நிர்வகிக்க முடியும்

2 mins read
பாட்டாளிக் கட்சியினர் எழுப்பிய கேள்விக்கு பதில்
aed34105-f30c-4c73-bdc4-0c8c2b0663ca
சாங்கி சிறைச்சாலையில் மே மாதம் 25ஆம் தேதியன்று சீர்திருத்தப் பிரிவில் நடக்க உதவும் உபகரணங்களைக் கொண்டு கைதிகள் பயிற்சி செய்கின்றனர். - படம்:ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

முன்னாள் போக்குவரத்து அமைச்சர் எஸ் ஈஸ்வரனின் எஃப்1 கார்ப் பந்தய வழக்கில் தொடர்புடைய செல்வந்தர் ஓங் பெங் செங்கின் வயதையும் உடல்நலக் குறைவையும் முன்வைத்து ஆகஸ்ட் மாதம் அவருக்கு அபராதம் தண்டனையாக விதிக்கப்பட்டது.

அவரைப் போன்று சிங்கப்பூர் சிறைச்சாலைகளில், நீண்டநாள் சுகாதாரப் பிரச்சினை உள்ள, வயதின் காரணமாக தடுமாறி விழக்கூடிய கைதிகளுக்கு எப்படிப்பட்ட ஏற்பாடுகள் உள்ளன என்று எதிர்க்கட்சியான பாட்டாளிக் கட்சியின் தலைவரும் அல்ஜுனிட் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான சில்வியா லிம் கேள்வி எழுப்பினார்.

அவரது சக குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரான ஜெரல்ட் கியாம், மோசமான சுகாதாரப் பிரச்சினையுடையோரை முறையாகக் கவனிக்க வசதிகளையும் நடைமுறைகளையும் சிறைச்சாலை நிர்வாகம் மறுபரிசீலனை செய்யுமா என கேள்வி கேட்டிருந்தார்.

உள்துறை மூத்த துணை அமைச்சரான இணைப் பேராசிரியர் முஹம்மது ஃபை‌‌‌ஷால் இப்ராஹிம், இரு எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கும் பதிலளித்தார். “சிறைச்சாலைகளின் மருத்துவ சுகாதாரக் கட்டமைப்பு தேசிய தரநிலைகளுக்கு ஏற்ப செயல்படுகின்றன. ஒவ்வொரு குற்றவாளியின் சுகாதாரப் பின்புலங்களைப் பொறுத்து நீதிபதிகள் முடிவெடுக்கின்றனர். சிறைச்சாலைகளில் கைதிகளுக்கு வழங்கப்பட இயலாத சிகிச்சைகளுக்கென வெளியில் இயங்கும் மருத்துவச் சேவைகளை நாட நிபுணர் குழு மறுஆய்வு செய்யும்,” என்று அவர் கூறினார்.

பல்வேறு சுகாதார நிலைமைகளைக் கொண்ட கைதிகளை நிர்வகிக்கும் கட்டமைப்பு சிங்கப்பூர் சிறைச்சாலை மருத்துவ வளாகத்தில் செயல்பாட்டில் உள்ளதாக அவர் விவரித்தார்.

பொது மருத்துவமனைகளிலும் தேசிய அமைப்புகளிலும் ஏற்படுத்தப்பட்டுள்ள சிறப்பு ஏற்பாடுகளை சிறைச்சாலைகளில் நடைமுறைப்படுத்துவதோ அவற்றை எதிர்பார்ப்பதோ சாத்தியமற்றது என்றும் அவர் எடுத்துரைத்தார்.

குறிப்புச் சொற்கள்