சிங்கப்பூரில் வாகனங்களுக்கான சிறப்புக் கூடுதல் பதிவுக் கட்டணத்தில் (PARF) வழங்கப்பட்டு வரும் சலுகையில் அறிவிக்கப்பட்டு இருக்கும் மாற்றம் குறித்து பல்வேறு கருத்துகள் உலவுகின்றன. அவற்றை ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தித்தாளின் மூத்த செய்தியாளர் (போக்குவரத்து) லீ நியான் டிஜோ (Lee Nian Tjoe) தொகுத்துள்ளார்.
சலுகை குறைக்கப்பட்டுள்ளதால் அதிகமான வாகன உரிமைச் சான்றிதழ் (சிஓஇ) புதுப்பித்தலுக்கு அது வழிவகுக்கக்கூடும் என்பதும் அவற்றில் ஒரு கருத்து.
பிரதமர் லாரன்ஸ் வோங் பிப்ரவரி 12ஆம் தேதி வெளியிட்ட வரவுசெலவுத் திட்ட அறிக்கையில் அந்த மாற்றம் இடம்பெற்று இருந்தது. சிறப்புக் கூடுதல் பதிவுக் கட்டணச் சலுகை பாதியாகக் குறைக்கப்பட்டு $30,000 என அறிவிக்கப்பட்டது.
ஒருவர் தமது காரின் ஆயுட்காலத்தை முடிவுக்குக் கொண்டு வந்து ‘ஸ்கிராப்’புக்குத் தேர்ந்து எடுக்கப்படுவதற்கான தூண்டுதலை அது பலவீனப்படுத்தக்கூடும் என்ற கருத்தும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அத்துடன், கட்டணக் கழிவு குறைக்கப்பட்டதால் மின்சார வாகனங்களுக்கும் சாதாரண வாகனங்களுக்கும் இடையிலான கட்டணத் தள்ளுபடி இடைவெளி குறையக்கூடும் என்று சிலர் தெரிவித்துள்ளனர்.
இந்த நடவடிக்கையால் கார் விலை நேடியாக உயர்வதற்குச் சாத்தியமில்லை. என்றாலும், கட்டணச் சலுகை குறைக்கப்படுவது காரின் மொத்த விலையை உயர்த்தும். அத்துடன், பத்தாவது ஆண்டில் பதிவு அகற்றப்பட்டு, ஆயுட்காலத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் கார்களின் எஞ்சிய பகுதிக்கான மதிப்பை அது குறைக்கக்கூடும் என்று கூறப்படுகிறது.
இது கார் வாங்குவோருக்கு ஒரு புதிய அனுபவமாக இருக்கும்.
சிறப்புக் கூடுதல் பதிவுக் கட்டணத்திற்கான (PARF) அதிகபட்சக் கழிவு $60,000ஆக இருந்தது. எல்லா வகையான வாகனங்களுக்கும் அதிலிருந்து 45 விழுக்காட்டுப் புள்ளிகள் குறைக்கப்படும் என்பது பிரதமரின் அறிவிப்பு.
தொடர்புடைய செய்திகள்
அதனால், அதிகபட்சக் கழிவு $60,000லிருந்து $30,000ஆகக் குறைகிறது. பிப்ரவரி மாதத்தின் இரண்டாவது வாகன உரிமைச் சான்றிதழ் ஏலத்தில் அந்த மாற்றம் நடப்புக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.
பழைய கார்களை முன்கூட்டியே கைவிட்டுப் புதிய கார்களுக்கு மாறுவதை ஊக்குவிக்க, சிறப்புக் கூடுதல் பதிவுக் கட்டண முறை கடந்த 1975ஆம் ஆண்டு சிங்கப்பூரில் அறிமுகம் கண்டது.
சிங்கப்பூரில் பெட்ரோல் கார்களால் ஏற்படுவதைக் காட்டிலும் குறைவான மாசை ஏற்படுத்தக்கூடியவை மின்சார வாகனங்கள். சிங்கப்பூரில் 2025ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட புதிய கார்களில் 45 விழுக்காடு மின்சார வாகனங்கள். 2023ஆம் ஆண்டைக் காட்டிலும் அது 18.1 விழுக்காடு அதிகம்.

