சிங்கப்பூரில் பல்வேறு மோசடிச் சம்பவங்களில் தொடர்புடையதாக நம்பப்படும் ஏறக்குறைய 300 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகக் காவல்துறை தெரிவித்து உள்ளது.
வேலை தருவதாக மோசடி, நண்பரைப்போல ஆள்மாறாட்டம் செய்து மோசடி, இணையக் காதல் மோசடி போன்ற இன்னும் பல மோசடிச் செயல்களில் அவர்களுக்கு இருக்கும் பங்கு குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது.
மொத்தம் 88 பெண்கள் உட்பட 292 பேர் பிடிபட்டனர். அவர்களில் ஆக இளையவரின் வயது 16; ஆக மூத்தவரின் வயது 78.
மோசடிகளுக்கு ஆளாகி $10.3 மில்லியனுக்கும் மேலான பணத்தை பொதுமக்கள் பறிகொடுத்த 1,287 மோசடிச் சம்பவங்களில் அவர்கள் ஈடுபட்ட சந்தேகம் இருப்பதாக வெள்ளிக்கிழமை (அக்டோபர் 18) காவல்துறை கூறியது.
இணைய வர்த்தக மோசடி, முதலீட்டு மோசடி, பொருள் வாங்குபவர் போல நடித்து மோசடி போன்றவற்றிலும் அந்த சந்தேக நபர்களுக்குத் தொடர்பு இருப்பதாகக் காவல்துறை கூறியது.
மோசடிக்காரர்களைத் தேடிப் பிடிப்பதற்கான சோதனை அக்டோபர் 4 முதல் அக்டோபர் 17 வரை நீடித்ததாகவும் வர்த்தக விவகாரப் பிரிவின் அதிகாரிகளும் சோதனையில் இணைந்திருந்ததாகவும் காவல்துறை மேலும் தெரிவித்தது.
ஏமாற்றுதல், கள்ளப் பணத்தை நல்ல பணமாக்குதல், உரிமம் இன்றி பணம் அனுப்பும் வர்த்தகம் செய்தல் போன்ற சட்டவிரோதச் செயல்கள் தொடர்பாகவும் அந்த 292 பேர் விசாரிக்கப்படுவதாகவும் அது குறிப்பிட்டது.
ஏமாற்றுக் குற்றத்திற்கு 10 ஆண்டுவரை சிறையும் அபராதமும் தண்டனையாக விதிக்கப்படலாம்.
தொடர்புடைய செய்திகள்
உரிமம் இன்றி பணம் அனுப்பும் வர்த்தகத்தில் ஈடுபடுவோரை மூவாண்டுவரை சிறையில் அடைக்கவும் அவர்களிடமிருந்து $125,000 வரை அபராதமாக வசூலிக்கவும் சட்டத்தில் இடமுண்டு.