தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பல்வேறு மோசடிகள்: 15 வயதுச் சிறுவன் உட்பட 500 பேர் பிடிபட்டனர்

2 mins read
d7e5e3d1-f9bf-4f33-8134-8b25413a4f33
காவல்துறையிடம் சிக்கியவர்களில் 143 பெண்களும் அடங்குவர். - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூர் காவல்துறை $12.20 மில்லியன் இழப்பீட்டுக்குக் காரணமான பல்வேறு மோசடிகள் தொடர்பாக மூன்று வாரங்களாக நடத்திய வேட்டையில் 500 பேர் சிக்கினர்.

அவர்களில் ஒருவர் பதின்ம வயது சிறுவன்.

அவர்களில் 143 பெண்களும் அடங்குவர். எஞ்சிய 339 பேரும் ஆடவர்கள். கைதான அனைவரும் 15 வயதுக்கும் 76 வயதுக்கும் இடைப்பட்டவர்கள்.

மோசடிகளில் நேரடியாக ஈடுபட்ட அல்லது மோசடிச் செயல்களில் பிறருக்கு உதவிபுரிந்த குற்றங்கள் தொடர்பிலான காவல்துறையின் விசாரணைக்கு சந்தேக நபர்கள் உதவி வருகின்றனர்.

செப்டம்பர் 13ஆம் தேதி தொடங்கிய காவல்துறையின் தேடுதல் வேட்டை அக்டோபர் 3 வரை நீடித்தது.

அந்த வேட்டையில் சிக்கிய 500 பேரில் 482 பேர், பிறரை ஏமாற்றுதல், கள்ளப் பணத்தை நல்ல பணமாக மாற்றுதல், உரிமம் இன்றி பணம் அனுப்பும் தொழில் நடத்தியது போன்ற குற்றங்கள் தொடர்பாக விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.

மேலும், அவர்கள் அனைவரும் சிங்கப்பூரில் நிகழ்ந்த 1,400க்கும் மேற்பட்ட மோசடிச் சம்பவங்களில் ஈடுபட்டதாக நம்பப்படுகிறது.

குறிப்பாக, இணையக் காதல் மோசடிகள், முதலீட்டு மோசடிகள், நண்பரைப் போல ஆள்மாறாட்டம் செய்யும் மோசடிகள், இணைய வர்த்தக மோசடிகள், வேலை மோசடிகள், பொருள்களை வாங்குவதைப் போல பாசாங்கு செய்து நடத்தப்படும் மோசடி ஆகியன அந்த 1,400 மோசடிச் சம்பவங்களில் அடங்கும்.

மோசடியில் ஈடுபட்ட குற்றத்திற்கு பத்தாண்டு வரையிலான சிறைத் தண்டனையும் அபராதமும் விதிக்கப்படலாம்.

கள்ளப் பணத்தை நல்ல பணமாக்கும் குற்றத்திற்கு பத்தாண்டு வரையிலான சிறைத் தண்டனையும் $500,000 வரையிலான அபராதமும் விதிக்கப்படலாம்.

அதேபோல, உரிமம் இன்றி பணம் அனுப்பும் தொழில் நடத்துவோருக்கு $125,000 வரையிலான அபராதமும் மூன்று ஆண்டு வரையிலான சிறைத் தண்டனையும் விதிக்க சட்டத்தில் இடமுண்டு.

குறிப்புச் சொற்கள்