துப்புரவு நிறுவனம் ஒன்றின் உரிமையாளர் ஒருவர் சட்டவிரோதமாக இரண்டு ஊழியர்களைப் பணியில் அமர்த்தியதோடு, 20 வெளிநாட்டினருக்கு வேலை அட்டைகளைப் பெற்றுக்கொடுத்ததற்குப் பணம் வாங்கியதாகவும் கூறப்படுகிறது.
சின் சியாவ்சி, 30, மீது வியாழக்கிழமை (ஜனவரி 9) 23 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. அவற்றில் 20, சட்டவிரோதமாகத் தொழிலாளர்களை இறக்குமதி செய்தது தொடர்பானவை.
எஞ்சிய மூன்று குற்றச்சாட்டுகளில், இரண்டு சட்டவிரோத வேலைவாய்ப்புக்கும் ஒன்று வேலை குறித்து பொய்யான தகவலை வழங்கியதற்கும் ஆகும்.
‘எக்ஸ்பிரஸ் க்ளீனிங் அண்ட் சர்விஸ்’ (Xpress Cleaning & Service) நிறுவனத்தின் உரிமையாளராக இருந்ததோடு, சின் சியாவ்சி ‘எக்ஸ்பிரஸ் மேனுஃபேக்ச்சர்’ (Xpress Manufacture) ‘எக்ஸ்பிரஸ் மேனுஃபேக்ச்சர்’ (Express Manufacture) என்ற மற்ற இரண்டு நிறுவனங்களின் இயக்குநராகவும் செயல்பட்டதாக மனிதவள அமைச்சு தெரிவித்தது.
சென்ற 2022ஆம் ஆண்டு மே மாதம் முதல் செப்டம்பர் மாதம்வரை, அந்த இரண்டு நிறுவனங்களில் பணிபுரிவதற்கான வேலை அட்டைகளைப் பணத்துக்குக் கைமாறாக, சின் 20 வெளிநாட்டினருக்குப் பெற்றுக்கொடுத்ததாகச் சந்தேகிக்கப்படுகிறது.
சிங்கப்பூர் வந்தபிறகு அந்த வெளிநாட்டினர் அவ்விரு நிறுவனங்களில் வேலைக்கு எடுக்கப்படவில்லை என்று அமைச்சு தெரிவித்தது.
குற்றச்செயல்களில் சம்பந்தப்பட்டதாகக் கூறப்படும் வெளிநாட்டினருக்கு எதிராக விசாரணை தொடர்வதாக அமைச்சு கூறியது. சின்னின் வழக்கு பிப்ரவரி 6ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
சட்டவிரோதமாகத் தொழிலாளர்களை இறக்குமதி செய்ததாக நிரூபிக்கப்படும் ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும் அவருக்கு ஆறு மாதங்கள் முதல் இரண்டு ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும் $6,000 வரை அபராதமும் விதிக்கப்படலாம். அத்தகைய ஆறு அல்லது அதற்கும் மேற்பட்ட குற்றங்கள் நிரூபிக்கப்பட்டால், பிரம்படியும் விதிக்கப்படலாம்.
தொடர்புடைய செய்திகள்
செல்லுபடியான வேலை அட்டை இல்லாத வெளிநாட்டினரைப் பணியில் அமர்த்தியதற்கான குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவருக்கு 12 மாதங்கள் வரை சிறைத் தண்டனை, $5,000 முதல் $30,000 வரை அபராதம் அல்லது இரண்டுமே விதிக்கப்படலாம்.
வேலை குறித்து பொய்யான தகவலைக் கொடுத்த குற்றம் நிரூபிக்கப்பட்டால், சின்னுக்கு ஈராண்டு வரை சிறைத் தண்டனை, $20,000 வரை அபராதம் அல்லது இரண்டுமே விதிக்கப்படலாம்.

