ஆண்கள், பெண்களுக்கிடையே மாறுபடும் மனச்சோர்வு அறிகுறிகள்: ஆய்வு

ஆண்கள், பெண்களுக்கிடையே மாறுபடும் மனச்சோர்வு அறிகுறிகள்: ஆய்வு

2 mins read
2018d193-6d9d-47db-9498-18d931afb916
ஏஸ்டார் அமைப்பு ஆய்வை வழிநடத்தியது. - படம்: டிராவ்கோ பிஹோவியரல் ஹெல்த்

மனச்சோர்வுக்கான அறிகுறிகள் ஆண்களுக்கும் பெண்களுக்கும் மாறுபட்ட விதத்தில் வெளிப்படும் என்று புதிய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.

பிள்ளைகள் வளர்ந்து பெரியவர்களாகும் பருவத்தில் காணப்படும் மனச்சோர்வு அறிகுறிகளுக்கும் மழலையர் பருவத்தில் இயங்கும் மூளை வளர்ச்சிக்கும் தொடர்பிருப்பதும் ஆந்த ஆய்வில் தெரிகிறது.

தொடக்கத்திலேயே ஆராய்தல்

பிள்ளைப் பருவத்தின் ஆரம்பக் கட்டத்திலேயே ஒருவருக்கு இருக்கக்கூடிய மனநலம் தொடர்பான பலவீனங்களை ஆய்வாளர்கள் ஆராயவேண்டியிருக்கலாம் என்று ஆய்வு சுட்டிக்காட்டுகிறது.

பொதுவாக அவர்கள் பெரியவர்களாக வளர்ந்துவரும் காலத்தில்தான் மனச்சோர்வு அறிகுறிகள் அடையாளம் காணப்படுகின்றன. ஆனால், இளம் பருவத்திலேயே ஆராயப்படவேண்டும் என்று ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மூளைப் பகுதிகளுக்கும் மனச்சோர்வுக்கும் தொடர்புகள்

ஆண்கள், பெண்கள் இடையே பிற்காலத்தில் தென்படும் பலவிதமான மனச்சோர்வு அறிகுறிகளுக்கும் மூளையின் வெவ்வேறு பகுதிகளுக்கும் தொடர்பிருப்பதை ஆய்வு கண்டுபிடித்தது.

பெண்களைப் பொறுத்தவரை, உணர்வுகளைக் கையாளும் மூளைப் பகுதிகளில் ஏற்படும் மாற்றங்களுக்கும் உற்சாகமற்றிருப்பது (low mood), தன்னைப் பற்றிய உயர்வான எண்ணம் இல்லாதது (low self-esteem) போன்ற அறிகுறிகளுக்கும் தொடர்பிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

ஆண்களைப் பொறுத்தவரை, மூளையின் மற்ற பகுதிகளில் இடம்பெறும் மாற்றங்களுக்கும் சோர்வு, ஆக்ககரமாகச் செயல்பட முடியாதது ஆகியவற்றுக்கும் தொடர்பிருப்பது தெரியவந்துள்ளது.

‘பாலினத்தின்படி மனச்சோர்வுக்கு வழிவிடும் மூளை வளர்ச்சி அம்சங்கள்’ (Sex-specific Neurodevelopmental Pathways to Depressive Symptoms) ஆய்வில் இத்தகவல்கள் தெரியவந்துள்ளன. சிங்கப்பூரில் இளையர்களிடையே மனநலம் குறித்த கவலைகள் அதிகரித்துவருவதையொட்டி இந்த ஆய்வின் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

முன்னதாக வெளியிடப்பட்ட ஆய்வறிக்கை

இதேபோல் கடந்த மே மாதம் வெளியிடப்பட்ட மற்றோர் ஆய்வறிக்கையில், மனநலக் குறைபாடுகள்தான் சிங்கப்பூரில் 10லிருந்து 14 வயதுக்கு உட்பட்டோரிடம் உடற்குறைகளும் மரணமும் ஏற்படுவதற்கான முக்கியக் காரணமாக இருக்கின்றன என்பது தெரிவிக்கப்பட்டது. மேலும், ஆசியான் வட்டாரத்திலேயே சிங்கப்பூரில்தான் மனநலச் சிக்கல்கள், மக்கள்தொகையின் சுகாதாரத்தில் ஆக அதிக தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதும் தெரியவந்தது.

ஏஸ்டார் அமைப்பின் மனித வளர்ச்சி, ஆற்றல் பிரிவு (ஐஎச்டிபி) ஆக அண்மைய ஆய்வை வழிநடத்தியது.

நாலரை வயதிலிருந்து ஆறு வயதுக்கு இடைப்பட்ட காலத்தில் ஆண்களைவிட பெண்களிடையே மூளையில் மாற்றங்கள் கூடுதல் வேகமாக நடைபெறுவது ஆய்வில் தெரியவந்தது. அதோடு, 13 வயதில் மனச்சோர்வு அறிகுறிகள் தென்படும் சாத்தியம் ஆண்களைவிட பெண்களிடையே இரண்டரை மடங்கு அதிகமாக இருப்பதும் தெரியவந்தது.

குறிப்புச் சொற்கள்
சிங்கப்பூர்சுகாதாரம்மூளைஆய்வுஆண்பெண்கள்வளர்ச்சிமனநலம்மருத்துவம்இளையர்குழந்தைபிள்ளை