நெதர்லாந்தின் விடிஎல் குரூப் (VDL Group) நிறுவனம் சிங்கப்பூரில் அதன் மூன்றாவது தொழிற்சாலையைத் தொடங்கியுள்ளது.
பகுதி மின்கடத்தி உற்பத்திக்கு உதவும் கருவிகளைத் தயாரிக்கும் விடிஎல் நிறுவனம் சிங்கப்பூரில் 1970ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது.
சிங்கப்பூரில் அடுத்த ஐந்து ஆண்டுகளில் 400க்கும் மேற்பட்ட ஊழியர்களை வேலைக்கு எடுக்கவும் விடிஎல் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
புதிதாகத் திறக்கப்படும் விடிஎல்குரூப் நிறுவனத்தின் தொழிற்சாலை கிட்டத்தட்ட 20,000 சதுர மீட்டர் பரப்பளவில் பைனியர் பகுதியில் அமைகிறது.
அந்த இடத்தில் அலுவலகக் கட்டடம், சேமிப்புக் கிடங்கு, தளவாடத்திற்கான இடம், கருவிகளைத் தயாரிக்கும் இடம் எனப் பல கட்டடங்கள் உள்ளன.
புதிய தொழிற்சாலையின் பெயர் SQ1 என்று அழைக்கப்படும். SQ1 மூலம் சிங்கப்பூரில் 30 விழுக்காடு கூடுதலாகக் கருவிகள் தயாரிக்கப்படும்.
புதிய தொழிற்சாலைக்காக 50 மில்லியன் வெள்ளிக்கு அதிகமாக முதலீடு செய்துள்ளதாக விடிஎல் குரூப் நிறுவனம் தெரிவித்தது. இருப்பினும் சரியான முதலீட்டு நிதியை அது வெளியிடவில்லை.
தற்போது சிங்கப்பூரில் செயல்படும் விடிஎல் குரூப் நிறுவனத்தில் ஏறத்தாழ 800 ஊழியர்கள் வேலை செய்கின்றனர்.
தொடர்புடைய செய்திகள்
SQ1 வளாகத்தில் 100 ஊழியர்கள் வேலை செய்ய முடியும். புதிதாக எடுக்கப்படும் மற்ற ஊழியர்கள் மற்ற வளாகங்களுக்கு மாற்றப்படுவார்கள் என்று தெரிவிக்கபட்டது.
விடிஎல் குரூப் நிறுவனத்தில் பொறியியல், தளவாடம், நிர்வாகம் உள்ளிட்ட துறைகளின்கீழ் ஊழியர்கள் வேலைக்கு எடுக்கப்படுவார்கள்.
அடுத்த ஐந்து ஆண்டுகளில் தங்களது நிறுவனம் 100 மில்லியன் முதலீடு செய்து SQ1 வளாகம் மற்றும் மற்ற இரண்டு வளாகங்களின் கட்டமைப்பை மேம்படுத்தும் என்று விடிஎல் குரூப்பின் சிங்கப்பூர் தலைமை நிர்வாகி சியம் சிங் சுங் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் கூறினார்.
விடிஎல் தற்போது 20 நாடுகளில் செயல்பட்டு வருகிறது.