தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

வாகன நுழைவு அனுமதித் திட்டம் தொடங்கியது

2 mins read
d5e99a53-f9b1-44a4-a1ff-c34adfa0b146
அக்டோபர் 1ஆம் தேதி காலை ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தியாளர்கள் உட்லண்ட்ஸ் சோதனைச்சாவடியை அடைந்தபோது, சோதனைச்சாவடியின் நுழைவாயிலில் விஇபி பதிவு தொடர்பான பலகைகள் வைக்கப்பட்டிருந்ததைக் கண்டதாகக் கூறினர். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரிலிருந்து மலேசியாவின் ஜோகூர் மாநிலத்துக்குச் செல்லும் சிங்கப்பூர் வாகனங்களுக்கான வாகன நுழைவு அனுமதி திட்டம் (விஇபி) அக்டோபர் 1ஆம் தேதியன்று தொடங்கியது.

அக்டோபர் 1ஆம் தேதிமுதல் சிங்கப்பூரிலிருந்து ஜோகூர் செல்லும் சிங்கப்பூர் வாகனங்களில் வாகன நுழைவு அனுமதி வில்லை, ‘டச் அண்ட் கோ’ மின்பணப்பையுடன் இணைக்கப்பட்டுள்ள விஇபி அலைவரிசை அடையாள வில்லை ஆகியவை பொருத்தப்பட்டிருக்க வேண்டும்.

விஇபி வில்லை இல்லாத சிங்கப்பூர் வாகனங்கள் ஜோகூருக்குச் செல்ல அனுமதிக்கப்படும்.

ஆனால், விஇபி வில்லையைப் பொருத்த சம்பந்தப்பட்ட வாகன ஓட்டுநர்களுக்கு நினைவூட்டப்படும்.

விஇபி வில்லை இல்லாமல் மலேசியாவிலிருந்து வெளியேறும்போது அவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்படும் என்று மலேசியாவின் சாலைப் போக்குவரத்துத் துறை செப்டம்பர் 27ஆம் தேதியன்று அறிவித்தது.

அக்டோபர் 1ஆம் தேதி காலை ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தியாளர்கள் உட்லண்ட்ஸ் சோதனைச்சாவடியை அடைந்தபோது, சோதனைச்சாவடியின் நுழைவாயிலில் விஇபி பதிவு தொடர்பான தகவல் பலகைகள் வைக்கப்பட்டிருந்தாகக் கண்டதாகக் கூறினர்.

விஇபி வில்லை, மலேசியாவுக்குள் செல்லும் சிங்கப்பூர் வாகனங்களின் அடையாள அட்டையைப் போல செயல்படுகிறது.

ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை அதனைப் புதுப்பிக்க வேண்டும்.

விஇபி அலைவரிசை அடையாள வில்லையைக் கொண்டு மலேசிய சாலைகளில் செல்லும் வெளிநாட்டு கார்களை அந்நாட்டுக் காவல்துறையால் அடையாளம் காண முடியும்.

விஇபி வில்லையைப் பயன்படுத்தி மலேசிய விரைவுச்சாலைகளில் கட்டணம் செலுத்தலாம்.

அதனைப் பயன்படுத்தி மலேசியாவுக்குள் செல்லும் வெளிநாட்டு வாகனங்களிடமிருந்து வசூலிக்கப்படும் 20 ரிங்கிட் (S$6) கட்டணத்தையும் செலுத்தலாம்.

இதற்கிடையே, விஇபி திட்டம் நடப்புக்கு வந்ததை அடுத்து, அக்டோபர் மாதம் 1ஆம் தேதியன்று உட்லண்டஸ் - ஜோகூர் பாலத்திலும் துவாஸ் இரண்டாம் பாலத்திலும் போக்குவரத்து தொடர்ந்து சீராக இருந்தது.

இருப்பினும், உட்லட்ண்சிலும் ஜோகூர் பாருவிலும் உள்ள விஇபி அலுவலகங்களில் கூட்டம் தொடர்ந்து அதிகமாக இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்நிலையில், அக்டோபர் 1ஆம் தேதியன்று சிங்கப்பூரிலிருந்து ஜோகூருக்குச் சென்ற கார்களின் எண்ணிக்கை ஏறத்தாழ 20 விழுக்காடு குறைந்தது என மலேசிய உள்துறை அமைச்சு அதிகாரி ஒருவர் கூறியதாக தி ஸ்டார் நாளிதழ் தெரிவித்தது.

ஆனால், அந்த நிலை விஇபி திட்டத்தால் ஏற்பட்டதா என்பது குறித்து இன்னும் தெரியவில்லை என்று அது கூறியது.

விஇபி பதிவை இன்னும் பூர்த்தி செய்யாத சிங்கப்பூர் வாகன உரிமையாளர்களுக்கு அக்டோபர் 1ஆம் தேதியன்று சுல்தான் இஸ்கந்தர் சோதனைச்சாவடியில் நினைவூட்டல் அறிக்கைகள் கொடுக்கப்பட்டதாக ஜோகூரின் சாலைப் பாதுகாப்புத்துறை தெரிவித்தது.

குறிப்புச் சொற்கள்