சிஓஇ முறையில் மாற்றம் தேவை என்பதில் வாகன வர்த்தகர்கள், கல்விமான்கள் உடன்பாடு

சிஓஇ முறையில் மாற்றம் தேவை என்பதில் வாகன வர்த்தகர்கள், கல்விமான்கள் உடன்பாடு

2 mins read
5a66680c-7a97-44b7-9120-411a53bab795
இரு பிரிவுகளையும் இணைக்க வேண்டும் என ஒரு தரப்பினரும் தற்போதைய நிலையிலேயே வைத்துக்கொண்டு சில சீர்திருத்தங்களைச் செய்ய வேண்டும் என மற்றொரு தரப்பினரும் கூறுகின்றனர். - படம்: சாவ்பாவ்

வாகன உரிமைச் சான்றிதழ் (சிஓஇ) முறையில் மாற்றம் தேவை என்பதில் வாகன வர்த்தகர்கள், கல்விமான்கள் ஆகியோர் உடன்படுகின்றனர்.

இருப்பினும், சிறிய வகை கார்களுக்கான கட்டணப் பிரிவு மற்றும் பெரிய வகை கார்களுக்கான கட்டணப் பிரிவை இணைப்பதில் மாறுபட்ட கருத்துகள் நிலவுகின்றன.

இரு பிரிவுகளையும் இணைக்க வேண்டும் என ஒரு தரப்பினரும் தற்போதைய நிலையிலேயே வைத்துக்கொண்டு சில சீர்திருத்தங்களைச் செய்ய வேண்டும் என மற்றொரு தரப்பினரும் கூறுகின்றனர்.

தற்போதைய முறை சந்தை மாற்றங்களுக்கு, குறிப்பாக மின்சார வாகனங்களின் ஆதிக்கத்திற்கு ஏற்ப ஈடுகொடுக்கவில்லை என்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தியாளர்களிடம் பேசிய வர்த்தகர்கள் சுட்டிக்காட்டினர்.

ஒரு கார் இறக்குமதி செய்யப்படும்போது அதன் சந்தை மதிப்பு எவ்வளவு என்பதை வைத்து, அது சாதாரண மக்களுக்கான காரா அல்லது உயர்ரக காரா என்பதைத் தீர்மானிக்கலாம் எனச் சிலர் பரிந்துரைத்தனர்.

விலை உயர்ந்த கார்களை வாங்குபவர்களிடமிருந்து விலை உயர்ந்த கார்களைவிட குறைந்த விலையில் உள்ள கார்களை வாங்கும் வாடிக்கையாளர்களைப் பாதுகாக்க, வாங்குபவரின் வீட்டு வகையையும் கணக்கில் கொள்ளலாம் என யோசனை முன்வைக்கப்பட்டது.

ஹாலந்து-புக்கிட் தீமா குழுத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் திரு எட்வர்ட் சியா, இரண்டு பிரிவுகளையும் தனித்தனியாக வைப்பதற்குப் பதிலாக அனைத்தையும் ஒரே பிரிவின்கீழ் கொண்டு வரலாம் என்றார். இதில் காரின் விலையைப் பொறுத்து, அதிக விலை கொண்ட கார்களுக்குக் கூடுதல் கட்டணமும் குறைந்த விலை கார்களுக்குத் தள்ளுபடியும் வழங்கலாம் என அவர் கூறினார்.

போக்குவரத்து அமைச்சின் வரவுசெலவுத் திட்ட விவாதத்தின்போது, தற்காலிகப் போக்குவரத்து அமைச்சர் ஜெஃப்ரி சியாவ், கார்களை வகைப்படுத்தும் முறையை மேம்படுத்த சிஓஇ முறை மறுஆய்வு செய்யப்படும் என்று மார்ச் 4ஆம் தேதியன்று அறிவித்தார்.

இந்த மறுஆய்வு 2026ஆம் ஆண்டின் இறுதிக்குள் முடிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

நிலப் போக்குவரத்து ஆணையம் இது தொடர்பாக வர்த்தகர்கள் மற்றும் பொதுமக்களின் கருத்துகளைப் பெறும். நீண்ட காலத்துக்கு நிலையான ஒரு அணுகுமுறையை உருவாக்குவதே இதன் நோக்கம்.

பிப்ரவரி மாதத்தின் இரண்டாவது சிஓஇ ஏலத்தில், சிறிய வகை கார்களுக்கான கட்டணம், பெரிய வகை கார்களுக்கான கட்டணத்தைவிட அதிகமாக இருந்தது.

பிப்ரவரி 20ஆம் தேதியன்று சிறிய வகை கார்களுக்கான கட்டணம் $106,501ஆக இருந்தது. பெரிய வகை கார்களுக்கான கட்டணம் $105,001.

சாதாரண மக்கள் கார் வாங்குவதை எளிதாக்க வேண்டும் என்ற சிஓஇ பிரிவுகளின் அசல் நோக்கத்திற்கு இது முரணாக இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கவலை தெரிவித்தனர்.

தற்போது, பெட்ரோல் பயன்படுத்தும் கார்களைப் போலவே மின்சார வாகனங்களும் சிஓஇ பிரிவுகளில் வகைப்படுத்தப்படுகின்றன. பல கார் நிறுவனங்கள் தங்கள் வாகனங்களின் ஆற்றலை சிறிய வகை கார்களுக்கான பிரிவில் வருமாறு மாற்றியமைப்பதால், அந்தப் பிரிவில் தேவை அதிகரித்து விலை உயர்கிறது என நாடாளுமன்ற உறுப்பினர் சுட்டிக்காட்டினார்.

குறிப்புச் சொற்கள்
கார்சிஓஇ கட்டணம்நாடாளுமன்ற உறுப்பினர்