தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

2030க்கு முன்பே சிங்கப்பூருக்கு மின்விநியோகம் செய்ய முனைந்துள்ள ‘வீணா எனர்ஜி’

2 mins read
d58316a7-95fd-41e8-9fe4-172c21786495
வீணா எனர்ஜி நிறுவனம் தைவானில் செயல்படுத்தும் ‘இ2’ சூரியசக்தித் திட்டம் மூலம் அங்குள்ள 90,000க்கு மேற்பட்ட வீடுகளின் மின்சாரத் தேவையை ஈடுகட்ட இயலும் எனக் கூறப்படுகிறது. - படம்: வீணா எனர்ஜி

சிங்கப்பூரைத் தளமாகக் கொண்டு செயல்படும் வீணா எனர்ஜி நிறுவனம், இந்தோனீசியாவின் ரியாவ் தீவில் 2 கிகாவாட் சூரியசக்தி உற்பத்தி செய்வதற்கான கட்டுமானத்தை 2026ஆம் ஆண்டு தொடங்கத் திட்டமிட்டுள்ளது.

அதிலிருந்து 2030ஆம் ஆண்டுக்கு முன்பே சிங்கப்பூருக்கு மின்சாரத்தை விநியோகிக்க இயலும் என்று அது நம்பிக்கை தெரிவித்துள்ளது.

அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி நிதின் ஆப்தே அதனைத் தெரிவித்தார்.

இந்த வட்டாரத்தில் புதுப்பிக்கப்படக்கூடிய எரிசக்தியில் செய்யப்படும் முதலீடுகள் தொடர்பான ஆர்வம் அதிகரிப்பதை இத்திட்டம் காட்டுவதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் திரு ஆப்தே குறிப்பிட்டார்.

காற்றாலை, சூரியசக்தி, ஹைட்ரஜன் உற்பத்தி போன்ற மின்உற்பத்தித் திட்டங்களிலும் உற்பத்தியான மின்சாரத்தை சேமிக்கும் எரிகலன்களுக்கான திட்டங்களிலும் ‘வீணா எனர்ஜி’ முதலீடு செய்துவருகிறது.

ரியாவ் தீவில் 2,000 முதல் 2,200 ஹெக்டர் பரப்பளவில் உற்பத்தி ஆலை அமைக்கப்படும் என்றும் அங்கிருந்து சிங்கப்பூருக்கு மின்சாரத்தை விநியோகிக்க கடலடிக் குழாய்கள் அமைக்கப்படும் என்றும் கூறப்பட்டது. இத்திட்டத்திற்கான பணிகள் கட்டங்கட்டமாக மேற்கொள்ளப்படும்; 2032ஆம் ஆண்டு அவை நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுவதாகக் கூறப்படுகிறது.

மின்சேமிப்புத் திட்டம் 8 கிகாவாட் எரிசக்தியைச் சேமிக்க வகைசெய்யும். ஆசியானில் ஆகப் பெரியதாக அது விளங்கும் என்று கூறப்படுகிறது.

ஆண்டுதோறும் சிங்கப்பூருக்கு 2.5 டெராவாட் மின்சாரத்தை விநியோகிக்கத் திட்டமிடுவதாகக் கூறிய திரு ஆப்தே, அதை இறக்குமதி செய்வது தொடர்பில் ஷெல் நிறுவனம், எரிசக்திச் சந்தை ஆணையத்துடன் பேச்சு நடத்தி வருவதாகக் கூறினார்.

அது 2021ஆம் ஆண்டு சிங்கப்பூரின் ஒட்டுமொத்த மின்சாரப் பயன்பாட்டில் ஐந்து விழுக்காட்டிற்கும் குறைவு என்று புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.

சிங்கப்பூர், 2035ஆம் ஆண்டில் நான்கு கிகாவாட் வரையிலான குறைந்த-கரிம மின்சாரத்தை இறக்குமதி செய்யத் திட்டமிடுகிறது.

ஆசிய-பசிபிக் வட்டாரத்தில் ஏழு நாடுகளில் 80 மின்உற்பத்தித் திட்டங்களை மேற்கொண்டுள்ளது ‘வீணா எனர்ஜி’ நிறுவனம்.

இந்த வட்டாரத்தில் பசுமை எரிசக்தி தொடர்பான முதலீடுகள் மேம்பட்டிருப்பதாக அது குறிப்பிட்டது. இந்த வட்டாரத்தின் எரிசக்தித் தேவைகளை ஈடுகட்ட டிரில்லியன்கணக்கில் முதலீடுகள் செய்யப்பட வேண்டும் என்கின்றனர் கவனிப்பாளர்கள்.

குறிப்புச் சொற்கள்